இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்த பிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. நேற்று தொடங்கிய முதல் டி20 போட்டியில் 209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, சூர்யகுமாரின் 80 ரன்கள் ஆட்டத்தின் உதவியால் வெற்றிபெற்று தொடரை 1-0 என தொடங்கியுள்ளது.
போட்டியில் 42 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உதவியுடன் 80 ரன்களை குவித்தார். நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் 28 பந்துகளை சந்தித்து 18 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். டி20யில் 47 சராசரியோடு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டி என வந்துவிட்டால் 25 சராசரியோடு வேறு ஒரு சூர்யகுமார் யாதவாக மாறிவிடுகிறார்.
இந்நிலையில் தான் நேற்றைய போட்டியில் வர்ணனையாளராக இருந்த மேத்யூ ஹெய்டன் சூர்யகுமாரின் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்ம் குறித்து ட்ரோல் செய்துள்ளார். அதை பாகிஸ்தானின் நட்சத்திர முன்னாள் பவுலர் ஷோயப் அக்தர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷோயப் அக்தர் பகிர்ந்திருக்கும் பதிவில் ரவிசாஸ்திரி மற்றும் மேத்யூ ஹெய்டன் இருவருக்கும் இடையில் உரையாடல் நடைபெறுகிறது. அந்த பதிவில், “இது போன்ற ஒரு பிரமாதமான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமாரை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். அதற்கு பதிலளித்திருக்கும் மேத்யூ ஹெய்டன் “அவரிடம் யாராவது சென்று நடப்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்று சொன்னால் போதும்” என பங்கமாக கலாய்த்துள்ளார்.
இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் ஷோயப் அக்தர் கீழே சிரிக்கும் ஸ்மைலிகளை பதிவிட்டுள்ளார். டி20 போட்டியில் புலியாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், ODI என வந்துவிட்டால் பூனையாக மாறிவிடுகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒடிஐ தொடரில் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட்டில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.