போட்டி 10: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா
மைதானம்: ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 12, மதியம் 2 மணி
ஆஸ்திரேலியா: முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் சுமாரகாவே செயல்பட்டது ஆஸ்திரேலிய அணி. அந்த அணி வீரர்கள் சொதப்பலாக பேட்டிங் செய்ய, 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி அணி. ஸ்டார்க், ஹேசில்வுட் இருவரும் மிரட்டலான 2 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், அதன்பிறகு கோலி - ராகுல் கூட்டணியின் சிறப்பான செயல்பாட்டால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது அந்த அணி.
தென்னாப்பிரிக்கா: முதல் போட்டியிலேயே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனை படைத்தது தென்னாப்பிரிக்கா. இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அந்த அணி 428 ரன்கள் குவித்தது. அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து இன்னொரு சாதனையும் செய்தனர். இலங்கை 326 ரன்கள் எடுக்க, 102 ரன்களில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் சொதப்பியிருந்தாலும், அதனால் அவர்கள் இந்த உலகக் கோப்பையில் தடுமாறுவார்கள் என்று சொல்லிட முடியாது. சென்னை ஆடுகளத்தில் அந்த அணி தடுமாறிவிட்டது. ஆனால் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா தான்! டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் என அனைவருமே நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார்கள். டாப் ஆர்டர் கிளிக் ஆனால் அந்த அணியைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு மிகவும் சுமாரகாவே இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
சமீபமாக ஒருநாள் போட்டிகளில் தடுமாறும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனுக்குப் பதிலாக முதல் போட்டியில் ஆடாத மார்கஸ் ஸ்டாய்னிஸ் இந்தப் போட்டியில் களமிறக்கப்படலாம். பந்துவீசும் அளவுக்கு ஃபிட்டாக இல்லாததால் அவர் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் அவர் களமிறக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் அனைத்து அணிகளுமே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. முதல் போட்டியில் அவர்கள் அடித்த அடி எந்த அணிக்கும் கிலி ஏற்படுத்தும். டி காக், வேன் டெர் டுசன், மார்க்ரம் மூவரும் சதமடித்து மிரட்டிவிட்டனர். கேப்டன் டெம்பா பவுமாவும் அடிக்கத் தொடங்கிவிட்டால் அந்த அணியைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். ஆனால் அவர்களின் பந்துவீச்சு கொஞ்சம் கவலை தருவதாக இருக்கிறது. ரபாடா, எங்கிடி போன்ற அனுபவ ஸ்டார் பௌலர்கள் இருந்தாலும், சமீபமாக அவர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள். ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்காக அனைவருமே சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் அவர்களால் அந்த அணியைக் கட்டுப்படுத்த முடியும். இலங்கைக்கு எதிராக கேஷவ் மஹராஜை மட்டுமே பயன்படுத்திய அந்த அணி, இப்போட்டியில் ஷம்ஸியையும் களமிறக்க நினைக்கலாம். ஒருவேளை அவர் விளையாடினால் கோட்ஸியை வெளியேற்றவேண்டிவரும்.
இந்த போட்டி நடக்கும் லக்னோ ஏகானா மைதானம் ஐபிஎல் தொடரில் பல விமர்சனங்களை சந்தித்தது. பெரும்பாலான போட்டிகள் சுழலுக்கு ஏகபோகமாக ஒத்துழைக்க, 130 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது. அந்த விமர்சனங்களுக்குப் பிறகு அனைத்து ஆடுகளங்கள் அனைத்துமே மொத்தமாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் மைதானத்தைப் பற்றிய எந்த வரலாறும் யாரும் தெரியாது. புதிய ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை போட்டியன்று பார்த்துத்தான் அணிகள் முடிவு செய்ய முடியும்.
ஆஸ்திரேலியா - மிட்செல் மார்ஷ்: முதல் போட்டியில் டக் அவுட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மார்ஷ். இந்திய ஆடுகளங்களில் மிகச் சிறந்த ரெக்கார்ட் வைத்திருக்கும் அவர் ஆஸ்திரேலிய அணி நல்ல தொடக்கம் கிடைப்பதற்கு மிகவும் முக்கியம். தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருக்கிறது என்பதால், அவரால் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடியும்.
தென்னாப்பிரிக்கா - கேஷவ் மஹாராஜ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை நிலைகுலையவைத்தார்கள். தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சு தடுமாறும் நிலையில், அந்த அணியின் முக்கிய ஸ்பின்னர் மஹாராஜ் இந்தப் போட்டியில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவேண்டும்.