இலங்கையில் தற்போது லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14-வது போட்டியில் தம்புல்லா அவுரா மற்றும் காலே டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது தம்புல்லா அவுரா. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த காலே டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தம்புல்லா அவுரா அணி 17.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அவிஷ்க பெர்னாண்டோ 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார்.
இதனிடையே இந்தப் போட்டியில் தம்புல்லா அவுரா அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனியை போன்று ரன் அவுட் செய்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த போட்டியின் இறுதி ஓவரில் காலே டைட்டன்ஸ் அணியின் வீரர் சமரகோன், ஸ்கொயர் லெக்கில் ஷாட் அடித்து இரண்டு ரன் ஓட முயன்றார். இரண்டாவது ரன் ஓட முயன்றபோது ஃபீல்டர் சதீர சமரவிக்ரம பந்தை சேகரித்து விக்கெட் கீப்பர் மெண்டியாவுக்கு த்ரோ செய்தார். ஸ்டெம்பிலிருந்து தூரமாக வந்த பிடித்த மெண்டியா, எம்எஸ் தோனி ஸ்டைலில் ஸ்டெம்பை பார்க்காமலே பின்பக்கமாக மின்னல் வேகத்தில் த்ரோ செய்து ரன் அவுட் செய்தார். இதனால் சமரகோன் 6 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இந்த ரன் அவுட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஸ்டைலை நினைவுபடுத்துவதாக அமைந்தது. ஸ்டெம்பை பார்க்காமலே பின்பக்கமாக த்ரோ செய்து ரன் அவுட் செய்யும் வித்தையை தோனி பலமுறை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது அவரது ஸ்டைலில் குசல் மெண்டிஸ் ரன்-அவுட் செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரலாகி இருக்கிறது.