இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியதிலிருந்தே அவரைபற்றிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்துவருகிறது. முதலில் விராட் கோலி எங்கு போனார், ஏன் இப்படி யாருக்கும் சொல்லாமல் விலகியுள்ளார் என்ற குழப்பமான கேள்விகள் எழுப்பட்டன. அதற்கெல்லாம் தீர்வாக அவர் தன்னுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளார் என்ற தகவலை விராட்-அனுஷ்கா தம்பதி அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து கோலி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ”கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் தொடரில் விளையாடாவில்லை என்றால், ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் போகலாம்” என கொளுத்தி போட, விராட் கோலி ஐபிஎல் தொடரிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் பரவியது.
அதற்குமேல் ”விராட் கோலி 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடமாட்டார், அவருடைய பேட்டிங் ஸ்டைல் வெஸ்ட் இண்டீஸின் மெதுவான ஆடுகளங்களுக்கு சரிவராது, அதனால் இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகவுள்ளார்” என்றும், அதுகுறித்து ”இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்” என்றும் தகவல் வெளியாகி பேசுபொருளாக இருந்துவருகிறது.
இந்நிலையில்தான் உலகம் முழுவதும் உள்ள ஆடுகளங்களில் விளையாடி 80 சதங்களுடன் 26000 ரன்களை குவித்திருக்கும் ஒரு வீரர் எப்படி டி20 உலகக்கோப்பையில் இல்லாமல் போவார் என்பது போலான கேள்வியை முன்னாள் இந்திய கேப்டன் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எழுப்பியுள்ளார்.
யூ-டியூப் ஷோ ஒன்றில் பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 2022 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துசென்ற ஒரு வீரர் எப்படி இல்லாமல் போவார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
கோலி குறித்து பேசியிருக்கும் அவர், “கோலி இல்லாமல் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி இல்லாமல் இந்திய அணியால் செல்ல முடியாது. 2022 டி20 உலகக் கோப்பையில் உங்களை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றவர். அவர்தான் போட்டியின் நாயகன். இதையெல்லாம் யார் சொல்வது? இந்த வதந்தி பரப்புபவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அடிப்படை என்ன?” என்ற கேள்வியை முன்வைத்த சீக்கா, ”டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி அணியில் இடம் பெற வேண்டும்” என்று ஸ்டிராங்காக தெரிவித்தார்.
மேலும் சச்சினை போன்ற கவுரவம் கோலிக்கு கிடைக்க வேண்டும் என்று கூறிய அவர், “உங்களுக்கு களத்திற்கு சென்று நிலைத்து நின்று விளையாடக்கூடிய ஒரு வீரர் தேவை. அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, இந்தியாவுக்கு அந்த ஆன்கர் ரோல் செய்யக்கூடிய வீரர் எப்போதும் தேவை. அதற்கு விராட் கோலி தான் சரியான வீரர், அதனால் அணிக்கு விராட் கோலி 100 சதவீதம் தேவை. 2011-ல் சச்சின் டெண்டுல்கர் எப்படி இந்திய அணியால் கவுரவிக்கப்பட்டாரோ, அதேபோல் விராட் கோலியும் கவுரவிக்கப்படுவார் என நான் இன்னும் நம்புகிறேன். விராட்டுக்காக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். கோலிக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்று சீக்கா தெரிவித்தார்.