“ஹர்திக் வருகையால் கோபத்தில் பும்ரா; எனக்காக இருந்தாலும் வலிக்கும்” - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

ஒரு வீரர் உங்கள் அணிக்காக அனைத்தையும் செய்யும் போது நீங்கள் வெளியிலிருந்து வரும் ஒருவரை கொண்டாடினால் எனக்காக இருந்தாலும் வலிக்கத்தான் செய்யும் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
ஹர்திக் - பும்ரா
ஹர்திக் - பும்ராTwitter
Published on

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்துள்ளது. மற்றொரு அணியில் கேப்டனாக இருக்கும் ஒரு வீரரை ரூ.15 கோடி கொடுத்து அழைத்து வருவது நிச்சயமாக அடுத்த கேப்டனுக்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா தன்னுடைய கடைசிகட்ட கிரிக்கெட் பயணத்தில் இருப்பதால், அடுத்த கேப்டனுக்கான முயற்சியாக ஹர்திக் பாண்டியாவை அழைத்துவந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் அவர்களின் இந்த முடிவு தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை காயப்படுத்தியுள்ளது.

Hardik Pandya
Hardik Pandyaipl

ஒருவேளை அணியில் இருக்கும் வீரர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கலந்து பேசவில்லையா என்பது தெரியவில்லை. ஒருவேளை பேசாமல் ஹர்திக் பாண்டியாவை அழைத்துவரும் முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் அது எந்த வீரருக்கும் சங்கடமான மனநிலையையே ஏற்படுத்தும். அணிக்காக எல்லாம் செய்த தன்னை நம்பாமல் வேறொரு நபரின் மீது நம்பிக்கை வைத்து அதீதமாக கொண்டாடும் போது அனைத்தையும் செய்த வீரருக்கு ஏற்படும் மனநிலை தான் ஜஸ்பிரித் பும்ராவிற்கும் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகவே அவருடைய இன்ஸ்டாகிராம் ”சைலன்ஸ்” பதிவும் வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியை X மற்றும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Bumrah
Bumrah

இந்நிலையில், ”பும்ராவின் மனநிலையை நீங்கள் பொறாமை, தலைக்கனம் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், பும்ராவின் நிலையில் யார் இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும் எனக்கும் வலிக்கும்” என ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

பும்ராவிடம் அமர்ந்து பேசியிருக்க வேண்டும்! - ஸ்ரீகாந்த்

ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பையின் மனநிலை மற்றும் பும்ராவின் செயல் குறித்து பேசியிருக்கும் சீக்கா, “ ஜஸ்பிரித் பும்ரா போன்று வேறொரு கிரிக்கெட் வீரரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அது டெஸ்ட் அல்லது வெள்ளைபந்து கிரிக்கெட் என எதுவாக இருந்தாலும் அவர் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார். நீங்கள் உலகக்கோப்பையை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் உயிரை கொடுத்து பந்துவீசியுள்ளார். இந்திய அணிக்கான அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். டெஸ்ட்டில் 2022-ல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டனில் நடந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஒரு தூண் போல செயல்பட்டுள்ளார்.

bumrah
bumrah

ஒருவீரர் உங்களுக்காக அனைத்தையும் செய்யும் போது, நீங்கள் அவரைவிட்டுவிட்டு உங்களை விட்டுச்சென்ற ஒருவீரரை ”பூமியிலேயே ஏதோ பெரிய பொருளை போல் கொண்டாடுகிறீர்கள்” என்றால் அது யாருக்காக இருந்தாலும் வலியை கொடுக்கும். நீங்கள் பும்ராவிற்கு ஏதோ பொறாமை, ஈகோ என எப்படிவேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம், அவருடைய இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் வலிக்கும். இதுபோன்று தான் சிஎஸ்கேவில் ஜடேஜாவுக்கும் நடந்தது. பின்னர் அவருடன் பேசி விசயத்தை சரிசெய்தார்கள். தற்போது பும்ராவுடன் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ரோகித் சர்மா அனைவரும் அமர்ந்து பேசி அவரை சரிசெய்ய வேண்டும்.

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

உண்மையில் பும்ரா நல்ல மனிதர், அவர் கோபமாக இருக்கிறார் என்றால் வெளிப்படையாக ஏதாவது நடந்திருக்க வேண்டும்” என்று ஸ்ரீகாந்த் தன்னுடைய யு-டியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com