புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகள் 12 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தாவுடன், 7 தோல்விகளை சந்தித்து 9 ஆவது இடத்தில் உள்ள மும்பை அணி மோதும்போட்டி. ப்ளே ஆஃப்க்கு செல்லாவிட்டாலும் தொடர் தோல்வியில் இருந்து மும்பை மீளுமா, ஹர்திக் ‘கேப்டன் நாக்’ ஆட்டத்தை ஆடுவாரா என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மன்னிக்கவும், அத்தனையும் கனவாகவே போனது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. கொல்கத்தா உடனான போட்டி, அதுவும் வான்கடே மைதானத்தில் என்றால், தூக்கத்தில் எழுப்பி மும்பை வீரர்களைக் கொண்டுவந்தாலும் வென்றுவிடுவார்கள். ஆனால், நடப்பு தொடரில் மும்பை அணி வீரர்கள் பழைய பன்னீர்செல்வமாகவா இருக்கிறார்கள். எப்பிடி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்றல்லவா இருக்கிறார்கள். எப்படியோ போகட்டும்.. நாம் ஆட்டத்திற்குள் போகலாம்.,
வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கினர் கொல்கத்தா அணியின் ஹிட்டர்கள். முதல் ஓவரில் விக்கெட்டும் விழுந்தது. துஷாரா வீசிய back of a length பந்தை சால்ட் அடித்து ஆட நினைக்க, அதுவோ எட்ஜ் ஆனது. சால்ட் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க நமன் திர் மற்றும் திலக் இருவரும் முயற்சிக்க ஒருவழியாக திலக் வர்மா பந்தைப் பிடித்து சால்ட்டை வெளியேற்றினார்.
கொல்கத்தாவில், ஹோம் மைதானமானத்தில் எதிரணியைப் போட்டு துவைக்கிறார் சால்ட். அந்நிய மண்ணில் அவரது செயல்பாடு மிக மோசமாகவே உள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் 6 போட்டிகளில் 344 ரன்களை எடுத்த அவர், வெளி மைதானங்களில் 4 இன்னிங்ஸ்களில் 53 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இரண்டாவது ஓவரில் இரு ரன்கள் மட்டும் கிடைக்க, மூன்றாவது ஓவரில் மீண்டும் 2 விக்கெட்கள் விழுந்தது. ரகுவன்ஷிக்கு எதிரான பந்தை மெதுவாக துஷாரா வீச, சூர்யகுமாரிடம் அழகான கேட்ச் ஒன்றைக் கொடுத்து அவுட்டானார் ரகுவன்ஷி. வந்ததும் அதிரடியாக ஆரம்பித்த ஸ்ரேயாஸையும் வெளியேற்றினார் துஷாரா. ஹர்திக் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்து வரவேற்றார் நரைன். ஆனால் அடுத்த பந்தே ஸ்டெம்ப்கள் தெறித்தன. கிட்டத்தட்ட 7 ஓவர்களில் 5 விக்கெட்கள் விழுந்தது. தள்ளாடியது கொல்கத்தா அணி.
ஆனால், மீட்பராக வந்தனர் வெங்கடேஷ் ஐயரும் மணீஷ் பாண்டேவும். நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார். ஆனால், பின் வந்த பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 19.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது.
மும்பை அணிக்கு 170 ரன்கள் மட்டுமே இலக்கு. வான்கடே, சொந்த மைதானம், நிச்சயமாக மும்பை வெல்லும் என்றே ரசிகர்கள் நினைத்தனர். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரில், ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் என இஷான் கிஷன் பறக்கவிட துள்ளிக்குதித்தனர் மும்பை ரசிகர்கள். ஆனால் அவரை அடுத்த பந்திலேயே போல்ட் ஆக்கி ஒட்டுமொத்த மும்பை ரசிகர்களையும் அமைதியில் ஆழ்த்தினார் ஸ்டார்க்.
ஒன் டவுனில் சூர்யகுமார் வேண்டாம், எதற்கு வம்பு என்று நமன் திர்ரை இறக்கிவிட்டது மும்பை. ஆனால் வந்த வேகத்தில் அவரும் நடையைக் கட்டினார். வருண் சக்கரவத்தியின் சுழலில் க்ளீன் போல்ட். அய்யயோ இந்த மேட்சும் வழக்கம் போலதான், என மும்பை ரசிகர்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டனர். ஏனெனில், நரைனுக்கும் ரோகித்துக்கும் ஏழாம் பொருத்தம். இதுவரை 7 முறை சுனில் நரைனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் ரோகித் சர்மா. இனி ஒருமுறை எடுத்தால் அது ஐபிஎல் வரலாற்றில் சாதனை ஆகிவிடும். ஏனெனில் ஒரு பேட்ஸ்மேனின் விக்கெட்டை பந்துவீச்சாளர் ஒருவர் 7 முறை எடுத்ததே அதிகபட்சம். விராட்டுக்கு சந்தீப் இருப்பதுபோல், தோனிக்கு ஜாகீர் கான். இன்னும் லிஸ்ட் உள்ளது. இவர்கள் எல்லாம் 7 முறை ஒரே பந்துவீச்சாளருக்கு எதிராக தனது விக்கெட்டை பறிகொடுத்தவர்கள். ரோகித் மீண்டும் தனது விக்கெட்டை பறிகொடுத்தால் அது புதிய சாதனை. சாதனையை நிகழ்த்திக்காட்டினார் நரைன். அவரது பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றார் ரோகித். ஆனால் பந்து எட்ஜ் ஆகி மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் ஆனது.
இதனை அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான திலக் வர்மா, வதேரா, பாண்டியா மூவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். வந்தார்கள், வீழ்ந்தார்கள், சென்றார்கள். ரிப்பீட் மூடில் இதுவே நடந்தது. திலக் வர்மாவிற்கு முன்பே களமிறங்கி, கேப்டன் நாக் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியாதான் 1 ரன்னில் வெளியேறினார். இந்த துயரத்தைத்தான் மும்பை ரசிகர்கள் எங்குபோய் சொல்வார்கள். 11.2 ஓவர்களில் 71 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது மும்பை.
‘இனி என்ன ஆகப்போகுது அவ்வளவு தான்’ என மும்பை ரசிகர்கள் நினைத்தாலும், அவ்வப்போது சில சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார் ஸ்கை. அவருக்கு டிம்டேவிட் சற்றே துணை நிற்க, வில்லனாக வந்தார் ரஸல். 30 பந்துகளில் அரைசதம் கடந்து நிதானமாக ஆடிய சூர்யகுமார், சிக்ஸர் அடிக்க முற்பட்டு, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனாலும், 18ஆவது ஓவர் வரை தட்டுத் தடுமாறி நின்றது மும்பை. 19 ஆவது ஓவரை வீசிய ஸ்டார்க், டிம்டேவிட், சாவ்லா, கோட்ஸீ என வரிசையாக வெளியேற்றி வெற்றியை உறுதி செய்தார். கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது மேலும் ஒரு தோல்வி மட்டும் அல்ல. இது வரலாற்று தோல்வி.
ஏனெனில், மும்பையை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்களுக்குப் பின் மீண்டும் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி. ஏறத்தாழ ப்ளே ஆஃபை உறுதி செய்துவிட்டது அந்த அணி. ஆட்டநாயகனாக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.
எது எப்படி இருந்தாலும் மும்பை மீண்டு வரும் என மீண்டும் நம்புவோம். மும்பை அணி அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.