இந்தியா-இலங்கை போட்டி என்றாலே பல பசுமையான நினைவுகள் இந்திய ரசிகர்கள் நினைவில் நீங்காமல் இருக்கும். அதுவும் இலங்கைக்கு அணிக்கு எதிரான 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது எப்போதும் இந்திய ரசிகர்கள் கொண்டாடும் ஒரு போட்டியாக இன்றுவரை இருந்துவருகிறது. இந்நிலையில் 2011-உலகக்கோப்பை பைனலுக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்திய அணி அதே வான்கடே மைதானத்தில் இலங்கையை எதிர்த்து இன்று விளையாடிவருகிறது.
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, சிறப்பான ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மாவை முதல் ஓவரிலேயே வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் மதுஷங்கா. 4 ரன்களுக்கே 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாறினாலும், 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 30 ஓவர் வரை நிலைத்து நின்று ஆடிய கில் மற்றும் கோலி இருவரும் அரைசதங்கள் அடித்து அசத்தினர்.
11 பவுண்டரிகள் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 90 ரன்களை கடந்து களத்திலிருந்த சுப்மன் கில் சதத்தை பதிவு செய்வார் என நினைத்த போது, மீண்டும் பந்துவீச வந்த மதுஷங்கா 92 ரன்னில் கில்லை அவுட்டாக்கி வெளியேற்றினார். கில் தான் சதத்தை தவறவிட்டு வெளியேறினார் என்று பார்த்தால், 88 ரன்களில் இருந்த விராட் கோலியும் சதத்தை தவறவிட்டு மதுஷங்காவிடமே வெளியேறினார்.
நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 4 முறை 80 ரன்களை கடந்த விராட் கோலி, ஒருமுறை மட்டுமே சதத்தை பதிவுசெய்தார். மீதி 3 முறையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள், நியூசிலாந்து போட்டியில் 95 ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக 88 ரன்கள் என சதத்தை தவறவிட்டு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். சச்சினின் 49 ஒருநாள் சதங்கள் என்ற உலக சாதனையை சமன்செய்ய இன்னும் ஒரு சதம் மட்டுமே கோலிக்கு தேவையாக இருக்கிறது.
அதற்கு பிறகு களமிறங்கிய கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் இருவரும் விரைவாகவே வெளியேறினாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பை தன் தோளில் சுமந்தார். இறுதிவரை நிலைத்து நின்ற ஸ்ரேயாஸ், 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு 82 ரன்கள் அடிக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 357 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயரும் வாய்ப்பு இருந்தும் சதத்தை தவறவிட்டார். சிறப்பாக பந்துவீசிய மதுஷங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 88 ரன்கள் அடித்த கிங்கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக முறை சதங்கள் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார். இதற்கு முன் 7 முறை (1994, 1996-98, 2000, 2003, 2007) ஆயிரம் ரன்களை கடந்திருந்த சச்சின் சாதனையை பின்னுக்கு தள்ளி, 8வது முறையாக (2011-14, 2017-19, 2023)* ஆயிரம் ரன்களை பதிவு செய்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
இந்த போட்டியில் கிங் கோலி படைத்த பிற சாதனைகள்..
* உலகக்கோப்பையில் அதிக அரைசதங்கள்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் 13வது அரைசதத்தை பதிவுசெய்தார் விராட் கோலி. இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக அரைசதங்கள் அடித்தவர்களில் பட்டியலில் 12 முறை அடித்திருந்த குமார் சங்ககரா, ரோகித் சர்மா, ஷாகிப் அல் ஹசன் மூவரையும் பின்னுக்கு தள்ளி 13 முறை அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ளார் கோலி. இந்த பட்டியலில் 21 முறை அரைசதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கிறார்.
* இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள்:
இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4000 ரன்களை கடந்த விராட் கோலி பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாமை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் 5108 ரன்களுடன் சச்சின் நீடிக்கிறார்.
* ODI-ல் அதிக அரைசதத்துக்கும் மேலான ரன்கள்:
இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த கிங் கோலி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 118வது முறையாக அதிகமுறை 50+ ரன்கள் வீரராக இரண்டாவது இடம்பிடித்துள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (145 முறை) நீடிக்கிறார்.
*ஆசியாவில் அதிவேக 8000 ரன்கள்:
வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆசியாவில் 8000 ஒருநாள் ரன்களை வேகமாக கடந்த வீரராக மாறினார். சச்சினை விட 29 குறைவான இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார் கிங் கோலி.