இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான சதத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.
அதற்குபிறகு 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணி, சர்பராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள், கோலி 70 ரன்கள் மற்றும் ரோகித் சர்மா 52 ரன்கள் என அடிக்க இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களை குவித்தது இந்தியா.
இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியால் அவ்வளவு குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்யமுடியவில்லை. முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 1988-க்கு பிறகு முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் இன்று தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியை இழந்தபிறகு தொடரை கைப்பற்றும் மனநிலையானது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருவருக்கும் அதிகமாகவே இருந்துவருகிறது. அதன் காரணமாகவே “மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளை வெல்லும் வகையில் அணி கட்டமைக்கப்படும்” என கவுதம் கம்பீரும், “எக்காரணம் கொண்டும் இந்த அதிரடியான அணுகுமுறை மாறாது” என ரோகித் சர்மாவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் சிறப்பாக செயல்படாத கேஎல் ராகுல், பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் 3 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றுவீரர்களாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் முதலிய வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
போட்டியை பொறுத்தவரையில் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்களுடன் விளையாடி வருகிறது.
2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (வி.கீ), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா