ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், ட்ரிக்கி ஸ்பின்னராகவும் இருந்துவந்த இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்திருந்தார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜாதவ், 73 ODIகளில் 101 ஸ்டிரைக் ரேட்டுடன் 42 சராசரியுடன் நல்ல ஸ்டேட்ஸ் உடனே இருந்தார். பெரும்பாலும் 6-வது இடத்தில் பேட்டிங் செய்த அனுபவமிக்க வீரரான இவர், இரண்டு சதங்களை அடித்துள்ளார்.
இருப்பினும் இந்திய அணியில் இருந்து டிராப் செய்யப்பட்ட கேதார் ஜாதவ், தற்போது ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். உண்மையில் 2023க்கான ஐபிஎல் ஏலத்தில் கூட எந்த அணியாலும் கேதார் ஜாதவ் எடுக்கப்படாமலே இருந்தார், பின்னர் தொடரின் இறுதிப்பக்கத்தில் ஆர்சிபி அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை வீரர் பிப்ரவரி 2020-ல் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தற்போது மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக டாப் ஆர்டரில் விளையாடிவரும் ஜாதவ், தன்னுடைய அனுபவம் குறித்து ஹிந்துஸ்தான் டைம் உடன் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “உங்கள் சொந்த மைதானத்தில் கிரிக்கெட்டை விளையாடுவது எப்பொழுதும் ஒரு அற்புதமான உணர்வு. மேலும் இதற்கு முன்பு ரஞ்சி டிராபி மற்றும் புனே கிளப் போட்டிகளில் ஒன்றாக விளையாடிய பெரும்பாலான சக ஊழியர்களுடன் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.
தன்னுடைய ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பற்றி கூறிய அவர், “ஐபிஎல்லை பொறுத்தவரையில் நான் முன் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்யவே முடியாது. நான் எப்போதும் கீழ் வரிசையில் மட்டுமே அனுப்பப்பட்டேன். அது எனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்த சரியான வாய்ப்பாக இல்லாமல் போனது. தற்போது முன் வரிசையில் இறங்கி விளையாடுவதை பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் உங்களின் கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைப்பதில் பேட்டிங் வரிசை மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது மகாராஷ்டிரா பிரீமியர் லீக் மற்றும் முதல் தர சீசனில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறிய அவர், அதன்பிறகு என்னுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று பொறுத்துதான் பார்க்கவேண்டும் என்று கூறினார். சமீபத்தில் நடந்த மஹாராஸ்டிரா ப்ரீமியர் லீக் போட்டியில் 52 பந்துகளில் 85 ரன்களை விளாசியிருந்தார் கேதார் ஜாதவ்.