முன்னாள் இந்திய வீரரான அன்ஷுமன் கெய்க்வாட், 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சராசரியுடன் 11 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை பதிவுசெய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 201 ஆகும்.
முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் அன்ஷுமன், 206 போட்டிகளில் 34 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும், ஆஃப் ஸ்பின்னராக 143 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். பல்வேறு நிலைகளில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ள அன்ஷுமன், தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், தனது சக வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக மற்ற அணி வீரர்களான மொஹிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்கார், மதன் லால், ரவி சாஸ்திரி மற்றும் கிர்த்தி ஆசாத் அனைவரின் ஓய்வூதியத்தை சேர்த்து நிதி திரட்டவிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோய்வாய்ப்பட்ட அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சகவீரரான அன்ஷுமன் கெய்க்வாட் குறித்து பேசியிருக்கும் கபில்தேவ், “இது மனதை நோகடிக்கும் மிகவும் சோகமான செய்தி. நான் அன்ஷூவுடன் சேர்ந்து விளையாடிய காலங்களை நினைத்துபார்த்து மிகுந்த வலியுடன் இருக்கிறேன், இந்த நிலையில் அவரைப் பார்க்க சகிக்க முடியவில்லை. அவரை வாரியம் கவனித்துக்கொள்ளும் என நம்புகிறேன். இருப்பினும் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்தில் இருந்துவர வேண்டும். அவர் விளையாடிய காலத்தில் சில மூர்க்கமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக களத்தில் நிற்கும்போது முகம் மற்றும் மார்பில் அடிவாங்கி விளையாடினார். இப்போது நாம் அவருக்காக நிற்க வேண்டிய நேரம். இந்திய ரசிகர்கள் அவரைத் தோற்கடிக்க விட மாட்டார்கள் என நம்புகிறேன், அவர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் தற்போது அனைத்து வசதியுடன் இருக்கும் பிசிசிஐ மூத்தவீரர்களை பாதுகாக்கும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என கூறியிருக்கும் அவர், “துரதிர்ஷ்டவசமாக உதவுவதற்கு எங்களிடம் எந்தஒரு அமைப்பும் இல்லை. இந்த தலைமுறை வீரர்கள் நன்றாக பணம் சம்பாதிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. துணை ஊழியர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைப்பது நல்லது. எங்கள் காலத்தில் வாரியத்திடம் பணம் இல்லை. நாங்கள் வாரியத்தை குறைகூறவில்லை, ஆனால் இன்று வாரியம் மூத்த வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். மூத்தவீரர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி கவனித்துக் கொள்ளலாம், பிசிசிஐ நினைத்தால் அது முடியும். அப்படி அவர்களால் முடியாத பட்சத்தில் நாங்கள் எங்கள் ஓய்வூதியத் தொகையை வழங்குகிறோம்” என்று அவர் ஸ்போர்ட்ஸ்டார் உடன் கூறியுள்ளார்ர்.