2007ம் ஆண்டுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வெல்லவே முடியாமல் தடுமாறி வந்த இந்திய அணி, 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்றதற்கு பிறகு கோப்பையின் வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.
இந்திய அணியை டாப் ஆர்டர்களாக முன்னின்று வழிநடத்திய மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 உலகக்கோப்பை வென்றபிறகு, டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தற்போது இரண்டு சாம்பியன் வீரர்களும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை குறிவைத்திருக்கும் நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து பேசியிருக்கும் முன்னாள் உலகக்கோப்பை கேப்டன் கபில்தேவ் இருவரும் இல்லாதது டி20 கிரிக்கெட்டுக்கு பாதகமானது தான் என்று கூறினார்.
2024 டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு இந்திய அணியை பாராட்டிய கபில்தேவ், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் மாற்று வீரர்கள் யாருமில்லை என்று கூறினார்.
கோலி மற்றும் ரோகித் குறித்து பேசியிருக்கும் கபில்தேவ், “இந்திய அணியை பொறுத்தவரை எந்த வடிவ கிரிக்கெட்டிலும் விராட் மற்றும் ரோகித்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர்களாக இருந்துள்ளனர், 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியானது அவர்களுக்கு மகிழ்ச்சியான பிரியாவிடையாக அமைந்தது. அனைத்து வடிவங்களிலும் விராட் கோலி உருவாக்கி வைத்திருக்கும் அந்தஸ்தை, டி20 போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் தவறவிடும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி போலத்தான் விராட்டும் ரோகித்தும், அவர்களுடைய இடம் யாராலும் ஈடுசெய்ய முடியாதவை” என்று ஐஏஎன்எஸ் உடன் கபில்தேவ் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வில் இருந்துவருகின்றனர். கோலி தொடர்ந்து ஓய்வில் இருப்பார் என்றும், ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு திரும்பிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.