பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், முதலில் விளையாடி 556 ரன்களை பாகிஸ்தான் குவித்தபோதும், இங்கிலாந்து அணி ஜோ ரூட் (262 ரன்கள்) மற்றும் ஹாரி ப்ரூக் (317 ரன்கள்) அபாரமான ஆட்டத்தால் 823 ரன்களை குவித்தது.
அதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்து தோற்பது வரலாற்றில் முதல் முறையாக பதிவுசெய்யப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிராக மிகமோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராகவும் மோசமான உலக சாதனை படைத்த நிலையில், அணிமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
பாபர் அசாம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பை என மிகமோசமான எதிர்வினையை சந்தித்த பாபர் அசாம், கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், தன்னுடைய மோசமான பேட்டிங் ஃபார்மாலும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.
இந்நிலையில், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து, “பாபர் அசாம், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி மற்றும் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ்” முதலிய வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாற்று வீரர்களாக அறிமுக வீரர்களான ஹசீபுல்லா, மெஹ்ரான் மும்தாஜ், கம்ரான் குலாம் மூன்று பேருடன், வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்து விளையாடிவரும் நிலையில், பாபர் அசாமுக்கு மாற்றுவீரராக களமிறங்கிய 29 வயதான கம்ரான் குலாம் அபாரமாக சதமடித்து அசத்தியுள்ளார். 216 பந்துகளை சந்தித்து நிலைத்து விளையாடிவரும் குலாம், 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 115 சேர்த்துள்ளார்.
19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறிய நிலையில், பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் அங்கிருந்து பாகிஸ்தான் அணியை மீட்டு எடுத்துவந்துள்ளார். இதைத்தான் மூத்தவீரரான பாபர் அசாம் கடந்த போட்டிகளில் செய்ய தவறினார். பாபர் அசாம் தன்னுடைய சிறந்த ஃபார்மை மீட்டுக்கொண்டுவர இந்த ஓய்வு அவசியம் தான் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.