உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற பட்டியலை எடுத்து பார்த்தால், முதல் பத்து இடங்களில் 4 அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களது தடத்தினை பதித்துள்ளனர்.
அந்த பட்டியலில் முதலிடத்தில் குமார் சங்ககரா மற்றும் ஜெயவர்தனே ஜோடி ஒரு விக்கெட்டுக்கு 627 ரன்கள் குவித்து நீடிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 756 ரன்கள் குவித்தபோது, எதிரணி பந்துவீச்சாளர்களாக டேல் ஸ்டெய்ன், இண்டினி, நெல் போன்ற தலைசிறந்த பவுலர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இரண்டாவது இடத்தில் இந்தியாவிற்கு எதிராக ஜெயசூர்யா மற்றும் மஹனமா 576 ரன்களுடன் (ஒரு இன்னிங்ஸில் 952/6d அடிக்கப்பட்டது) பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டனிஸ் கனேரியா, உமர் குல், சொஹைல் போன்ற வீரர்கள் இருந்தபோது 437 ரன்கள் குவித்திருந்தது இலங்கை அணி.
இப்படி ஒரு பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்திருந்த இலங்கை அணியில், தற்போது இருக்கும் வீரர்கள் ஒருசில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் நீண்டகாலத்திற்கு அதை எடுத்துச்செல்லும் நிலைத்தன்மையை எடுத்துச்செல்லாமல் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் குமார் சங்ககரா மற்றும் ஜெயவர்த்தனே போன்ற வீரர்களுக்கு மாற்றுவீரராக மாறுமளவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அசாத்தியவீரராக ஜொலித்து வருகிறார் கமிந்து மெண்டீஸ்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி வெறும் 8 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி இருக்கும் 25 வயது கமிந்து மெண்டீஸ், அதில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை அடித்து 69 பேட்டிங் சராசரியுடன் ரன் மெஷினாக மாறிவருகிறார்.
டாப் ஆர்டர் வீரர்கள் எளிதில் வெளியேறினாலும் மிடில் ஆர்டர் வீரராக வரும் கமிந்து மெண்டீஸ், எப்படிப்பட்ட டாப் பவுலராக இருந்தாலும் சிறப்பான டெக்னிக் மூலம் எதிர்கொள்கிறார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இலங்கை அணியில் 3 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்திருக்கும் கமிந்து 12, 113, 74 ரன்களை குவித்துள்ளார். அவரின் 8 இன்னிங்ஸ்களை பொறுத்தவரை ”61(137), 102(127), 164(237), 92*(236), 113(183), 74(120)” ரன்களை குவித்து சங்ககரா, ஜெயவர்தனே இல்லாத குறையை தீர்த்துவருகிறார் கமிந்து மெண்டீஸ்.
முதல் டெஸ்ட் போட்டியை இழந்த இலங்கை அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 196 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, 29/1 என்ற நிலையில் 259 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது.