முன்னாள் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடக்க வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், கேஎல் ராகுலை ஒரு நேர்த்தியான மற்றும் ஆபத்தான வீரர் என்று புகழ்ந்துள்ளார். தான் ஆஸ்திரேலியா பயிற்சியாளராக இருந்தபோது, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் வெளியேறும் வரை நிம்மதியே இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவரும் கேஎல் ராகுல், தற்போது தன்னுடைய வாழ்நாள் ஃபார்மில் ஜொலித்து வருகிறார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்து அசத்திய அவர், உலகக்கோப்பையில் 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் மிடில் ஆர்டர் வீரராகவும் ஜொலித்துவருகிறார். மிடில் ஆர்டர் வீரராக மட்டுமில்லாமல் ஒரு விக்கெட் கீப்பராகவும் நேர்த்தியாக செயல்பட்டு வரும் ராகுல், இந்திய அணியின் நீண்டநாள் குறையை தீர்த்துவருகிறார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் கேஎல் ராகுலை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவர்களுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த காணொளியில் கேஎல்ராகுலை புகழ்ந்திருக்கும் ஜஸ்டின் லாங்கர், “நான் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்றது. அந்த தொடரின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அவுட்டாகி வெளியேறும் வரை நான் ஓய்வெடுக்கவே இல்லை. ஏனென்றால் கோலியை போன்றே கேஎல் ராகுலும் நேர்த்தியான மற்றும் ஆபத்தான ஒரு வீரர். அவருடன் எல்எஸ்ஜி அணியில் கைக்கோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கேஎல் ராகுலிடம் அனுபவம் உள்ளது. அவர் மைதானத்தின் இரண்டு பக்கமும் விளையாடக்கூடிய ஒரு வீரர். வேகப்பந்துவீச்சு மட்டுமில்லாமல் சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும் அதிரடியாக ஆடக்கூடியவர். கே.எல். ராகுல் போன்ற ஒரு கேப்டனைப் பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடன் சேர்ந்து பயணிப்பதற்கு நான் உற்சாகமாக இருக்கிறேன்" லாங்கர் கூறியுள்ளார்.