நவீனகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் முதலிய வீரர்களின் பெயர்களுக்கு போட்டியாக ஜோ ரூட் என்ற பெயர்தான் முதலில் வந்து நிற்கும்.
அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் என எடுத்துக்கொண்டால் 5 இரட்டை சதங்கள், 31 சதங்கள் மற்றும் 50 சராசரியுடன் 11,899 ரன்களை குவித்திருக்கும் ஜோ ரூட் தனக்கென ஒரு பாரம்பரியத்தையே கட்டி எழுப்பியுள்ளார்.
தன்னை ஒரு ஜாம்பவான் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நிலைநிறுத்தியிருக்கும் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 32வது சதமடித்து அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 122 ரன்களை அடித்திருக்கும் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 32வது சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அலைஸ்டர் குக் மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு 32 டெஸ்ட் சதங்களை அடிக்க அதிக இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்ட வீரராக மாறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,940 ரன்களை அடித்திருக்கும் ஜோ ரூட், 11,867 ரன்கள் அடித்திருந்த சிவ்நரைன் சந்தர்பாலை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.
ஹரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் இருவரின் அசத்தலான சதங்களால் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 425 ரன்களை குவித்துள்ளது இங்கிலாந்து அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 385 ரன்கள் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடவிருக்கிறது.