இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான எதிர்காலத்தை ஆரோக்கியமாக மாற்றும் வகையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார்.
ஆனால் அதை பின்பற்றாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, அவர்களுடனான மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல், “வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டால் விளைவு அதிகமாக இருக்கும்” என பிசிசிஐ தரப்பு மீண்டும் ஒருமுறை எச்சரித்தது.
இந்நிலையில் கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, மூத்த வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. அதனால் நடக்கவிருக்கும் துலீப் டிராபியில் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட அனைத்து இந்திய வீரர்களும் பங்கேற்று விளையாடுவார்கள் என்ற செய்திகள் வெளியாகின. அதற்கான காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் சிறந்த வீரர்கள் ஆப்சன்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோணத்தில் பிசிசிஐ செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது.
2012-ல் கடைசியாக உள்நாட்டு போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 12 வருடங்களுக்கு பிறகு களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை தொடருக்கே தலைமை பயிற்சியாளர் கம்பீர், கோலி மற்றும் ரோகித்தை பங்கேற்க வைத்தது சர்ச்சையான நிலையில், துலீப் டிராபியில் கோலி மற்றும் ரோகித் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானது.
இந்நிலையில் துலீப் டிராபிக்கான 4 அணிகளை பிசிசிஐ அறிவித்த நிலையில், அந்த 4 அணிகளுக்கும் சுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் முதலிய வீரர்கள் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் பெயர்களும் இடம்பெறவில்லை, நீண்டநாட்களாக ஒதுக்கிவைக்கப்பட்ட இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இடம்பெற்று விளையாடுகின்றனர்.
மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மாவும் துலீப் டிராபியில் பங்கேற்க வேண்டும் என கம்பீர் கூறியநிலையில், ஏன் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற கேள்வி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், "அவர்களைத் தவிர, மற்ற வீரர்கள் அனைவரும் விளையாடுகிறார்கள், அதை நீங்கள் பாராட்ட வேண்டும். இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் விளையாடுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களை துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது.
அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் கவனித்திருந்தால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில், அனைத்து சர்வதேச வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நாம் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், வேலையாட்களை போல நடத்தக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.