இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறக்கும்போது தன் மனைவியோடு இருப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து மும்பை திரும்பினார்.
இந்த செய்தி வெளியானதும் ஒருசில கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் இந்த முடிவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
ஒரு வீரர் தன் மனைவியின் பிரசவநேரத்தில் அவருடன் இருப்பதற்காக சென்றதைக் கூட ஒருசிலர் குற்றம் போல் பேசுவது அதிர்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடந்துவருகிறது. சனிக்கிழமை நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது போட்டி நேபாள அணிக்கெதிராக திங்கள் கிழமை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா மும்பைக்குத் திரும்பியிருப்பதாகவும், நேபாள அணியுடனான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்றும் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
திடீரென்று வந்த இந்தச் செய்தி சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ஒருவேளை அவர் மீண்டும் காயமடைந்துவிட்டாரோ என்று கருதப்பட்டது. ஏனெனில், கிட்டத்தட்ட ஓராண்டாக காயமடைந்திருந்த பும்ரா கடந்த மாதம் தான் மீண்டு வந்தார். ஆனால், அவர் தனக்குக் குழந்தை பிறக்கவிருப்பதால், தன் மனைவி சஞ்சனா கனேசனோடு இருக்க மும்பை சென்றிருப்பதாகவும், ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் அவர் பங்கேற்பார் என்றும் தெரியவந்தது.
பலரும் பும்ராவுக்கு குழந்தை பிறக்கப் போவதற்காகப் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டிருந்தாலும், ஒருசில ரசிகர்கள் அதைக் குறைசொல்லவும் செய்தார்கள். நாட்டுக்காக விளையாடும்போது தேசிய அணியை விட்டுவிட்டு அவர் எப்படிச் செல்லலாம் என்று கேட்கிறார்கள் அவர்கள். அவர் காயத்திலிருந்து இப்போதுதான் அணிக்குத் திரும்பியிருப்பதால் அவர் போட்டியில் பங்கேற்றிருக்கவேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
ஒருசிலரோ 2020 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது கோலி நாடு திரும்பியதை ஒப்பிட்டு, 'இந்தக் காலத்தில் வீரர்களுக்கு தேசிய அணிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லை' என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். ஒருசில தோனி ரசிகர்களோ வழக்கம்போல், 'Ziva பிறந்தபோது தோனி குழந்தையைப் பார்க்கச் செல்லாமல் தேசிய அணிக்காக விளையாடினார். தோனியைப் போல் யாரும் இருக்க முடியாது' என்று தோனியின் புகழ் பாடும் சாக்கில் மற்ற வீரர்களைக் குறை சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே இது எவ்வளவு தவறான விஷயம் என்று புரிவதில்லை.
பும்ரா குழந்தை பெறப்போகும் தன் மனைவியோடு இருப்பதற்காகத்தான் இந்தப் போட்டியிலிருந்து விலகியிருக்கிறார். இப்படியொரு தருணத்தில் தன் மனைவியோடு இருப்பதை விட முக்கியமான விஷயம் ஒரு ஆணுக்கு இருந்துவிட முடியாது.
அதை இந்த ரசிகர்கள் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் தேசப்பற்று மட்டுமே எந்த ஒருவருக்கும் முக்கியமான விஷயம் என்ற கருத்தை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.
தேசிய அணிக்கு ஆடுவதே ஒருவரின் தலையாய கடமை என்று நினைக்கிறார்கள் இவர்கள். எவ்வளவுதான் உணர்ச்சிப்பூர்வமாக ரசித்தாலும் ஆதரித்தாலும் அது கிரிக்கெட் தான். விளையாட்டு தான். தன் குடும்பத்தை விட யாரும், எதுவும் ஒருவருக்கு முக்கியமானதாக இருந்துவிடப்போவதில்லை. கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் எல்லோரும் இவர்கள் வரையும் வட்டத்துக்குள் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள்.
இன்றைய உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எவ்வளவோ விளையாட்டு வீரர்கள் தங்கள் உளவியல் பிரச்சனைகளுக்காக விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் நயோமி ஒசாகா வரை பலரும் விளையாட்டிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறார்கள். விளையாட்டு உலகம் அந்த வீரர்களின் முடிவுகளை மதித்திருக்கிறது. பாராட்டியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படியொரு சூழல் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான்.
இந்த பும்ரா விஷயம் மட்டுமல்ல. சமீபத்தில் பிரித்வி ஷாவின் உடல்வாகு, அவரின் தலைமுடி என பல்வேறு விஷயங்களை ரசிகர்கள் கேலி செய்தார்கள். சிறு வயதிலிருந்து தான் சந்தித்த உளவியல் பிரச்சனைகளைப் பற்றி அவர் பேசியிருந்தும் இவர்களால் அதற்கு மதிப்பளிக்க முடியவில்லை.
மேக்ஸ்வெல் போல், ஒசாகா போல் பிரித்வியால் 'மென்டல் ஹெல்த் பிரேக்' இங்கு எடுக்க முடியுமா? எடுத்தால் இந்த ரசிகர்கள் அதை மதிப்பார்களா? சந்தேகம் தான். நாடுதான் முக்கியம் என்று போலி தேசப் பற்றைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள், மனித உணர்வுகளை மதிக்கப் போவதில்லை.