"100 ஆண்டுகளில் தலைசிறந்த யார்க்கர்"! ரிப்பீட் மோட்ல பாத்துட்டே இருக்கலாம் சார்! இது பும்ரா மேஜிக்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒல்லி போப்பிற்கு எதிராக ஒரு கால்விரலை நசுக்கும் யார்க்கர் டெலிவரி மூலம் ஸ்டம்பை தகர்த்தெறிந்த பும்ரா, தலைசிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.
பும்ரா க்ளாசிக் யார்க்கர்
பும்ரா க்ளாசிக் யார்க்கர்X
Published on

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி பெறவேண்டிய இடத்திலிருந்த இங்கிலாந்து அணியை, “ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட்” என அனைத்து விதமான அட்டாக் ஷாட்களையும் விளையாடிய ஒல்லி போப், உண்மையான பாஸ்பால் அட்டாக் என்றால் இதுதான் என இந்திய அணியை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டார். உடன் பந்துவீச்சில் மிரட்டிய டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை வீழ்த்த, யாரும் வெல்லாத இடத்திலிருந்து இந்தியாவை தோற்கடித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற போதும் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை. 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுவிட்டு சொந்த மண்ணில் இந்திய அணி தோற்பது இதுவே முதல்முறை. அந்த வெற்றிக்கான பாராட்டு மொத்தமும் ஒல்லி போப் என்ற தனியொரு பேட்ஸ்மேனின் சிறந்த பேட்டிங்கிற்கே சென்றுசேரும்.

இந்நிலையில் முதல் டெஸ்ட்டில் பெற்ற பெரும் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய மண்ணில் ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சை பதிவுசெய்தார்.

இன்ஸ்விங், அவுட்ஸ்விங், ஸ்லோ கட்டர் என அனைத்துவிதமான மேஜிக் பந்துகளையும் களத்தில் பிரயோகித்த பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்கவைத்தார். அதிலும் ஒல்லி போப்பை ஒரு விளையாடவே முடியாத யார்க்கர் மூலம் இரண்டு ஸ்டம்புகளை காற்றில் பறக்கவிட்டு வெளியேற்றிய போது, முதல் போட்டில வாங்குன அடிக்கு “இது போதும் பா” என சொல்லுமளவு கலக்கிப்போட்டார் பும்ரா.

கடந்த 100 ஆண்டில் காணாத பர்ஃபெக்ட் யார்க்கர்!

113 ரன்களுக்கு 1 விக்கெட் என நல்ல நிலைமையில் இருந்த இங்கிலாந்து அணி , திடீரென 159 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் என பறிகொடுத்து தடுமாறியது. அதில் 3 மேஜிக் டெலிவரிகளை வீசியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஜோ ரூட், ஒல்லி போப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என்ற முப்பெரும் தலைகளை தன்னுடைய அறிவுத்திறனால் வெளியேற்றியிருந்தார்.

ஜோ ரூட் விக்கெட்டை பொறுத்தவரையில், பும்ராவிற்கும் ரூட்டிற்கும் பெரிய போராட்டமே இருந்தது. கடந்த போட்டியில் பும்ராவின் பந்துவீச்சில் ரூட் LBW மூலம் விரைவாகவே வெளியேறியிருந்த நிலையில், இந்த போட்டியில் LBW விக்கெட்டை பாதுகாக்கும் வகையில் ஆஃப் ஸ்டம்பை கவர்செய்து நகர்ந்து நகர்ந்து விளையாடினார். அதுமட்டுமல்லாமல் காலிற்கு நேராக வரும் பும்ராவின் இன்ஸ்விங்கை கட் செய்யும் வகையில் ஆடுகளத்தில் இறங்கிகூட விளையாடியானர். ரூட்டின் இந்த பாதுகாப்பு அணுகுமுறையை மீறி எப்படி பும்ரா பந்துவீசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் ரூட் எதிர்ப்பாராத வகையில் ஒரு பர்ஃபெக்ட் லெந்த் டெலிவரியில் அவுட்ஸ்விங்கை வீசிய பும்ரா, ரூட்டை பீட் செய்தார். எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விரக்தியில் வெளியேறினார் ஜோ ரூட்.

ஒல்லி போப் விக்கெட்டை பொறுத்தவரையில், அதை விவரிக்க வார்த்தையே இல்லை. உலகத்தின் எந்தஒரு ஜாம்பவான் பேட்டராக இருந்தாலும் அப்படியொரு பந்தை எதிர்கொள்ளவே யோசித்திருப்பார்கள். கடந்த போட்டியில் 196 ரன்கள் அடித்த ஒரு வீரர், தற்போது 55 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், அப்படியொரு பந்தில் வெளியேற்றுவதை என்னவொரு பந்துவீச்சு என்று வர்ணிக்க முடியும். இது நூற்றாண்டின் தலைசிறந்த யார்க்கர் பந்துவீச்சு அவ்வளவே!

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை பொறுத்தவரையில், ஸ்டோக்ஸ் எப்போதும் ஒரு எதிர்பாராத பந்திற்கு அவுட்டாகும் போது எபிக்கான பாவனையை வெளிப்படுத்துவார். அப்படித்தான் இந்த போட்டியிலும் பும்ராவிற்கு எதிரான அவுட்ஸ்விங் பந்துவீச்சில் அவுட்டானது போது எபிக்கான ரியாக்சன் செய்தார். 47 ரன்களில் இங்கிலாந்தை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச்செல்லவேண்டும் எண்ணத்தில் ஆடிக்கொண்டிருந்த கேப்டனுக்கு நிச்சயம் அப்படியொரு விக்கெட்டை ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

என்னவொரு பந்துவீச்சு சார், ரிப்பீட் மோடுல பார்த்துட்டே இருக்கலாம். இந்திய மண்ணில் ஒரு வேகப்பந்துவீச்சாளரின் சிறந்தபந்துவீச்சு இதுமட்டுமே! என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் பும்ராவை கொண்டாடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com