பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 25 வயது இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரூக், 7 மணிநேரம் 97.4 ஓவர்களுக்கு களத்தில் நின்று 322 பந்துகளை எதிர்கொண்டு 29 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 317 ரன்கள் குவித்து அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உண்மையில் அவர் எதிர்முனையில் ஆடி 267 ரன்கள் குவித்த ஜோ ரூட்டை விட தன்மீது அனைவரது பார்வையையும் திருப்பினார். ஏனென்றால் 322 பந்துகளை சந்தித்தாலும் அவருடைய பேட்டிங் ஸ்டிரைக்ரேட் 98ஆக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் ஹாரி ப்ரூக், 6 சதம், ஒரு இரட்டை சதம், ஒரு முச்சதம் உட்பட 62.5 சராசரியுடன் 1,875 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தான் விளையாடிய மூன்று தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஹாரிப்ரூக் மாறியுள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.
ஹாரி ப்ரூக்கின் அசாத்தியமான பேட்டிங்கை புகழ்ந்து பேசிய டெய்லெண்டர்ஸ் போட்காஸ்டில் ஆண்டர்சன், “ஹாரி ப்ரூக் நான் விளையாடிய முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கான பாதையில் இருக்கிறார். அதாவது ரூட், பீட்டர்சனுக்கு பிறகு ஹாரி ப்ரூக் நிச்சயம் இடம்பிடிப்பார். ஏன் அவர்களை முந்துவதற்கான அனைத்து பண்புகளையும் ப்ரூக் நிச்சயமாக பெற்றுள்ளார்.
அவரிடம் எல்லாமே இருக்கிறது. தனது டெஸ்ட் வாழ்க்கையில் இன்னும் ஆரம்பத்தில் இருந்தாலும், அவர் வெளிப்படுத்தும் கம்போஸிங்கான ஆட்டம் அவரை தலைசிறந்த வீரராக மாற்றும் என்று நான் நம்புகிறேன். அவரால் அதிரடியாகவும் விளையாட முடியும், ஒருநாள் முழுவதும் நின்றும் விளையாட முடியும். அதுவே அவரை இங்கிலாந்தின் எப்போதைக்குமான தலைசிறந்த வீரராக மாற்றும்” என்று கூறியுள்ளார்.