இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் “பாஸ்பால் அட்டாக்” மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இங்கிலாந்து அணி பதிவு செய்தது.
இந்நிலையில் முதல் டெஸ்ட்டில் 80 ரன்களில் சதத்தை தவறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஓப்பனர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். இந்திய அணி 16 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், இங்கிலாந்து ஸ்பின்னர் சோயப் பஷீர் ரோகித்தை 14 ரன்னில் வெளியேற்றி தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில், 34 ரன்களில் அட்டமிழநது வெளியேறினார். இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழ்ந்த நிலையில், பொறுப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மீது அதிகமானது. அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இந்த கூட்டணி 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இந்நிலையில், 94 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால், ஹார்ட்லி வீசிய 49வது ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு தன்னுடைய முதல் ஹோம் சதத்தை பதிவு செய்தார். வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் அடிக்கும் 2வது டெஸ்ட் சதம் இதுவாகும். இந்த சதத்தை அவர், 151 பந்துகளில், 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் கடந்தார்.
சீராக ரன்கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாம்ஹார்ட்லி பந்தில் பென் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெஹான் அகமது பந்தில் போல்டானார். அக்சர் படேல் 27 ரன்களிலும், ஸ்ரீகர் பரத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்திருந்தது.
ஜெய்ஸ்வால் 257 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 179 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால், அஸ்வின் ஆகியோர் தொடர்ந்தனர். 5 ரன்களுடன் களமிறங்கிய அஸ்வின் மேலும் 15 ரன்களை சேர்த்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 179 ரன்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். நேற்று முதல் சதத்தை அடித்து அசத்தியிருந்த நிலையில் இன்று மேலும் ஒரு சதமடித்து தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி விளாசி இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
290 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 19 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். 23 வயதுக்குள் வெளிநாடு மற்றும் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த ஜெய்ஸ்வால். இன்று மேலும் ஒரு சதமடித்து இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளார். இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஜெய்ஸ்வாலின் இன்றைய ஆட்டம் 2008 ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை நினைவுகூறும் வகையில் இருந்தது. இந்திய அணி இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தது. அதுவும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தான். கவுதம் காம்பீர் தொடக்கத்தில் அரைசதம் அடித்து சேவாக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும் அதன் பிறகு வந்த வீரர்கள் யாரும் களத்திற்கு நிற்கவில்லை. தனி ஒருவனாக ரன்களை குவித்து வந்தார். அதுவும் அதிரடி குறையாமல்.
ராகுல் டிராவிட் 2, சச்சின் 5, கங்குலி 0, தினேஷ் கார்த்திக் 7 என அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். விவிஎஸ் லக்ஷ்மண் மட்டும் 39 அடித்து சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்தார். பந்துவீச்சாளர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க ஒரு வழியாக தன்னுடைய இரட்டை சதத்தை பதிவு செய்தார் சேவாக். அப்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேவாக் ஆட்டமிழக்காமல் 201 ரன்களுடன் களத்தில் இருந்தார். 22 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி இருந்தார் சேவாக்.
சேவாக்கை போலவே ஜெய்ஸ்வாலும் இறுதிவரை களத்தில் இருந்து 8ஆவதாக தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தவிர்த்து அதிகபட்சமாக சுப்மன் கில் மட்டுமே 34 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தன்னுடைய அதிரடியாக ஆட்டத்தின் மூலம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை ஜெய்ஸ்வால் நிரூபித்துள்ளார்.