இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து முதல் போட்டியிலும், இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியானது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 மற்றும் இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 430 ரன்கள் அடித்து 557 ரன்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஜெய்ஸ்வால் 214* மற்றும் சுப்மன் கில்லின் 91 ரன்கள் உதவியால் 556 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், மிகப்பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ரவிந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 122 ரன்களுக்கு சுருண்டு ஆல்அவுட்டானது. இதன்மூலம் 434 ரன்கள் என்ற மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
557 என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி துருவ் ஜுரேலின் ஒரு சிறப்பான ரன் அவுட் மூலம் முதல் விக்கெட்டை இழந்தது. அதற்கு பிறகு பும்ரா சாக் கிராவ்லியை வெளியேற்ற, சிறிது நேரத்தில் ஒல்லி போப், ரூட், ஜானி பேர்ஸ்டோ என அனைவரையும் ஓரிலக்க ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் ரவிந்திர ஜடேஜா.
28 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து எடுக்க ஜடேஜாவுக்கு போட்டியாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரெஹன் அகமதை வெளியேற்றினார் குல்தீப் யாதவ். ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, தன் பங்கிற்கு அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்த 122 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது இங்கிலாந்து.
434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பதிவுசெய்யும் மிகப்பெரிய மார்ஜின் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் 2021-ல் நியூசிலாந்துக்கு எதிராக 372 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே இந்திய அணியின் மிகப்பெரிய மார்ஜின் வெற்றியாக இருந்தது. தற்போது அதை உடைத்து புது வரலாற்றை எழுதியுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.