இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. முதல்நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக நடத்தப்படவில்லை.
இந்நிலையில் 4வது நாளான இன்று ஆட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 233 ரன்கள் அடித்த நிலையில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
வங்கதேச வீரர் கலீத் அகமது விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.
இதன்மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 3000 டெஸ்ட் ரன்கள் அடித்த இரண்டாவது உலக வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜடேஜா. இந்த பட்டியலில் இம்ரான் கான், கபில்தேவ் முதலிய ஜாம்பவான்களின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய 7வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறைவான டெஸ்ட்டில் 300 விக். + 3000 ரன்கள்:
1. 72 போட்டிகள் - இயன் போத்தம்
2. 74 போட்டிகள்* - ரவீந்திர ஜடேஜா
3. 75 போட்டிகள் - இம்ரான் கான்
4. 83 போட்டிகள் - கபில் தேவ்/ ரிச்சர்ட் ஹாட்லீ
5. 87 போட்டிகள் - ஷான் பொல்லாக்
6. 88 போட்டிகள் - ரவிச்சந்திரன் அஸ்வின்