தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி அங்கு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளுக்கு கேஎல் ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா என 3 விதமான இந்திய கேப்டன்கள் 3 வடிவிலான போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற போதிலும், தென்னாப்பிரிக்காவில் மட்டும் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. கடந்த 2021-2022 சுற்றுப்பயணத்தில் கூட வெற்றிபெற வேண்டிய சூழலில் இருந்து 2-1 என டெஸ்ட் தொடரை நழுவவிட்டது இந்தியா. இந்நிலையில் இந்தமுறையாவது தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்ப்பு இருக்கும் நிலையில், இந்தியாவால் தென்னாப்பிரிக்கா அணியை வெல்வது கடினம் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் செஞ்சுரியன் மற்றும் கேப் டவுன் மைதானங்களில் நடக்கவிருக்கின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் ஜாக் காலிஸ், இந்திய அணிக்கு காப் டவுன் வெற்றிபெறுவதற்கான ஆடுகளமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிடிஐ உடன் பேசியிருக்கும் ஜாக் காலிஸ், “இது ஒரு நல்ல இந்திய அணி, ஆனால் இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவில் வைத்து தோற்கடிப்பது கடினமான ஒன்றாக இருக்கும். செஞ்சுரியன் தென்னாப்பிரிக்காவிற்கும், கேப் டவுன் இந்தியாவிற்கும் பொருத்தமான ஆடுகளங்களாக இருக்கும். உண்மையில் இது ஒரு நல்ல தொடராக இருக்கப்போகிறது. ஒரு அணி மற்ற அணியை விட சிறப்பாக விளையாடும் அமர்வுகளாக இருக்கும்பட்சத்தில், இரண்டு போட்டிகளும் நெருக்கமான போட்டிகளாக இருக்கும் என நினைக்கிறேன்" என்று ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.