டெங்குவால் அவதிப்படும் Shubman Gill! ரோகித் சர்மாவுடன் களம் காண்பது இஷான் கிஷனா?
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதால், தொடக்க நிலை போட்டிகளில் அவர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அப்படியென்றால் தொடக்க வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உலகக்கோப்பையை கைப்பற்றும் வேட்கையில் உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சேப்பாக்கத்தில் தங்கள் தொடக்க போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட நிலையில், ஷுப்மன் கில் இரு நாட்களாக அதில் பங்கேற்கவில்லை. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ, ஷூப்மன் கில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவக்குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஷுப்மன் கில் முதல் சில போட்டிகளில் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றே கூறப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ரன் குவித்த வீரர்களில் ஷுப்மன் கில் 1,230 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சராசரி 72.35ஆகவும், ஸ்டிரைக் ரேட் 105ஆகவும் உள்ளது. குறிப்பாக இந்திய மைதானங்களில் மட்டையை சுழற்றி மள மளவென ரன்களைக் குவிப்பதில் வல்லவராகவே ஷுப்மன் கில் திகழ்ந்து வருகிறார்.
இதனால் அவரது உடல்நிலை பாதிப்பு அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஷுப்மன் கில்லுக்கு மாற்றாக இஷான் கிஷன் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு இஷான் கிஷன் 5 போட்டிகளில் தொடக்க வீராக களமிறங்கி, 3 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 ஆவது வீரராக இறங்கி 82 ரன்கள் குவித்ததும் நினைவில் இருக்கலாம்.
காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் தனது ஃபார்மை நிரூபித்தார். எனினும் இவர் தொடக்க வீரராக களமிறங்கி ஓராண்டுக்கு மேலாகிறது. இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த கே.எல்.ராகுல் அவசியம் என அணி நிர்வாகம் கருதுமாயின், இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறக்கப்படவே வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.