உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முற்றிலும் அதிரடியான பாணியைக் கடைபிடித்துக்கொண்டிருக்கிறது. 2019 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி எந்த பாணியைக் கடைபிடித்ததோ, அதே பாணியைக் கடைபிடித்துவருகிறது ஆஸ்திரேலிய அணி!
2015 உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பிறகு முற்றிலும் மாறுபட்ட யுக்தியைக் கையில் எடுத்தது. மோர்கன் தலைமையில் வைட் பால் புரட்சி மாபெரும் வெற்றி கண்டது. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் முதல் பந்திலிருந்தே ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் வைக்கும் வல்லமை படைத்தவர்களாக இருந்தார்கள். அதிரடி என்பதைத் தாண்டி எதிரணிக்கு எதிராக உளவியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது இங்கிலாந்து. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 'பாஸ்பால்' என்று கொண்டாடலாம். ஆனால் அதே பாணியை ஒருநாள் அரங்கில் பல ஆண்டுகளாக அந்த அணி பின்பற்றியே வந்தது. அதன் பலனாய் 2019 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து. அடுத்ததாக ஜாஸ் பட்லர் தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பையையும் வென்றது இங்கிலாந்து.
கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலிய அணி ஆடிவருவதைப் பார்க்கும்போது அவர்களும் இங்கிலாந்தின் அந்த பாணியையே பின்பற்றுகிறார்களோ என்று தோன்றுகிறது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. கேப்டன் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி வீரர்கள் பலர் ஃபிட்னஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தலைமையில் களம் கண்டது ஆஸ்திரேலியா. உலகக் கோப்பை அணியில் இல்லாத பலரும் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். இருந்தாலும், தங்களின் அணுகுமுறையால் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது அந்த அணி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சனிக்கிழமை விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி 392 ரன்கள் குவித்தது. ஆம், 400 ரன்களுக்கு வெறும் 8 ரன்கள் தான் குறைவு. இரட்டை இலக்க ரன்கள் கடந்த அனைத்து பேட்ஸ்மேன்களுமே 100+ என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் விளையாடினார்கள். இந்தப் போட்டியில் மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இப்படித்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 164 ரன்களை 15 ஓவர்களுக்குள்ளாகவே சேஸ் செய்தது. மூன்றாவது போட்டியில் 190 ரன்களை 18வது ஓவரிலேயே சேஸ் செய்து வைட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா. மூன்று டி20 போட்டிகளிலுமே 11+ ரன்ரேட்டில் பேட்டிங் செய்தது அந்த அணி. 11+ ரன் ரேட்!
இந்த அதிரடி என்பது நல்ல தொடக்கம் அமைவதாலோ, நல்ல சூழ்நிலையில் இருப்பதாலோ மட்டும் கடைபிடிக்கப்படுவதில்லை. முதல் ஒருநாள் போட்டியில் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார் டேவிட் வார்னர். இருந்தாலும் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் 7+ ரன்ரேட்டில் தான் பேட்டிங் செய்தனர். ஆறாவது ஓவரிலேயே மார்ஷ் ஆட்டமிழந்தாலும் அவர்களின் அணுகுமுறை மாறவில்லை.
இரண்டாவது போட்டியில் மிட்செல் மார்ஷ் அவுட் ஆன விதம் அவர்களின் அணுகுமுறை பற்றி தெளிவாகச் சொல்லும். டிராவிஸ் ஹெட் அவுட் ஆன பிறகு களம் கண்ட மிட்செல் மார்ஷ், தப்ராய்ஸ் ஷம்ஷியின் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். பந்தைத் தவறவிட்டு முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் அவர். ஒரு சைனாமேன் பௌலருக்கு எதிராக முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவது மாபெரும் ரிஸ்க். இருந்தாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ஆடினார் உட்சபட்ச ஃபார்மில் இருக்கும் மார்ஷ்.
இந்த அணுகுமுறை ஆஸ்திரேலியாவுக்கு இத்தொடரில் பெரும் வெற்றியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் விளையாடியிருக்கும் 5 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. ரபாடா, எங்கிடி, யான்சன், கொட்சியா என புயல் வேக பந்துவீச்சாளர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
இதுதான் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறை என்றால், எந்த பந்துவீச்சு யூனிட்டுமே நிச்சயம் அச்சப்படவேண்டும்.
இங்கிலாந்தும் சரி, ஆஸ்திரேலியாவும் சரி அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இப்படி அதிரடி காட்டுவதற்கு, அவர்களின் 'பேட்டிங் டெப்த்' முக்கியமான காரணம். 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கிறிஸ் வோக்ஸ் நம்பர் 8ல், ஜோஃப்ரா ஆர்ச்சர் நம்பர் 9ல் விளையாடினார்கள். பத்தாவது வீரராக ஆடிய லியாம் பிளங்கட் கூட ஒருநாள் போட்டிகளில் 20 என்ற சராசரியில் ஆடியிருக்கிறார். அப்படி இருக்கும்போது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நம்பிக்கை இருக்கும்தானே.
இப்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கும் அதே நம்பிக்கை இருக்கவே செய்கிறது. மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல கேமியோக்கள் கொடுக்கக் கூடியவர்கள் என்பது அந்த அணிக்கு மிகவும் சாதகமான அம்சம்.
ஆக, 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து செய்ததை, அவர்களின் பாணியிலேயே இம்முறை செய்ய திட்டமிடுகிறது ஆஸ்திரேலியா. அது அரங்கேறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கவே செய்கிறது. ஆனால், இங்கிலாந்து அணியில் இருந்த ஒரு விஷயம், இந்த ஆஸ்திரேலிய அணியில் மிஸ் ஆகிறது.