2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவுசெய்துள்ள நிலையில், மற்ற ஐபிஎல்லை போலவே இந்த ஐபிஎல் ஏலத்திலும் மிகப்பெரிய பிட்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய மண்ணில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அந்த வீரர்கள் எல்லாம் எவ்வளவு விலைக்கு செல்லப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில், கடந்த ஐபிஎல்லில் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் 6.75 கோடிக்கு எடுத்த அம்பத்தி ராயுடு முதலிய பெரிய விலை வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், அந்த அணியிடம் மற்ற அணிகளை விட ரூ.31.40 கோடி கையிருப்பு உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பெரிய பந்துவீச்சாளர்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு ஆல்ரவுண்டருக்கான மாற்று தேடலில் நிச்சயமாக செல்லவிருக்கின்றது.
இந்நிலையில் தான் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட ஹர்சல் பட்டேலை எடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய அணி வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
சிஎஸ்கே குறித்து பேசியிருக்கும் இர்ஃபான் பதான், “சிஎஸ்கே அணியில் தீபக் சாஹரைப் போன்ற அடிக்கடி காயமடையக்கூடிய பல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். சென்னை அணி தீபக் சாஹர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் காயத்தால் திடீரென விளையாட முடியாமல் போய்விட்டால், அவர்கள் நிச்சயம் குழப்பத்தில் செல்லக்கூடும். ஆகையால் அவர்களுக்கு தேவையாக இருப்பது ஹர்ஷல் பட்டேல் போன்ற ஒரு வீரர் தான். பெங்களூரு சென்னைலிருந்து வெகு தொலைவில் இல்லை, எனவே ஹர்ஷல் படேலை ஐந்து மணி நேரம் சிறிய சவாரி மூலம் அழைத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன் ”என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் இர்ஃபான் பதான் பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணி விவரம்:
தக்கவைக்கப்பட்ட CSK வீரர்கள்: எம்எஸ் தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம், துபே, அஜிங்க்யா ரஹானே, டெவோன் கான்வே, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மிட்செல் சான்ட்னர், மதீஷ பதிரானா, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிம்ரன்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், அஜய் மண்டல்.
வெளியேற்றப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி.
கையிருப்பு தொகை : ரூ.31.40 கோடி