தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரில், முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று இரவு அபுதாபியில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 195 ரன்களை குவித்த அயர்லாந்து அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஸ் அடேர் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பால் ஸ்டிர்லிங் 52 ரன்கள் சேர்த்து வெளியேற, 5 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ரோஸ் அடேர் 100 ரன்கள் குவித்து மிரட்டினார். ரோஸ் அடேரின் அதிரடி மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை, ரோஸ் அடேரின் சகோதரரான மார்க் அடேர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிவிட்டார். தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர்கள் நல்ல அடித்தளம் அமைத்தாலும், அடுத்து வந்த அனைத்து வீரர்களும் ஓரிலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அடேர் சகோதரர்கள், 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
அடேர் சகோதரர்களின் அபார ஆட்டத்தால் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்ததோடு, தொடரையும் 1-1 என சமன் செய்து வரலாறு படைத்தது.