தொடர் தோல்வி எதிரொலி! தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து இன்சமாம் ராஜினாமா! காரணத்தை அடுக்கிய PCB!

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது.
inzamam ul haq
inzamam ul haqicc
Published on

2023 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணி பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் வீரர்களின் தேர்வும் சரியாகவே இருந்தது. ஆனால் அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட நஷீம் ஷா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதை அடுத்து அந்த அணி மோசமாக செயல்பட்டுவருகிறது. மாற்றுவீரராக வந்த வீரர்கள் கூட சொதப்புவதால், கையில் இருந்த போட்டியை கூட தவறவிட்டு தோல்வியை சந்தித்துவருகிறது பாகிஸ்தான் அணி.

Pakistan
Pakistan

6 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நீடிக்கிறது. இதற்கு பிறகு அந்த அணி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றால், இனிவரும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Pakistan
Pakistan

இதற்கிடையில் வீரர்களின் தேர்வு என்பது சொந்த விருப்பத்தின் தேர்வாக மட்டுமே இருந்துவருகிறது. இது தான் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என சமூகவலதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக சொதப்பி வருவதையடுத்து தலைமை அணி தேர்வாளரான இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா செய்த இன்சமாம்? என்ன காரணம்?

பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளுக்கு பிறகு பலதரப்பட்ட விசயங்கள் பேசுபொருளாக மாறின. முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரஷித் லடிஃப்,”பாகிஸ்தான் வீரர்கள் 5 மாதங்களாக சம்பளமே பெறவில்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போன் செய்தாலோ, மெசேஜ் செய்தாலோ பாகிஸ்தான் நிர்வாகத்திடமிருந்து எந்த ரிப்ளையும் செய்யப்படுவதில்லை. கேப்டனுக்கு நிர்வாகத்தின் சேர்மேன் மற்றும் மற்ற உறுப்பினர்களும் கூட பதிலளிக்காததற்கு என்ன காரணம்? காரணம் என்னவென்று வெளிப்படையாக சொல்லவேண்டியது தானே. ஆனால் அதற்கு பிறகு நீங்கள் ஒரு செய்திக்குறிப்பை வெளியிடுகிறீர்கள். மத்திய ஒப்பந்தங்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று கூறுகிறீர்கள்” என குற்றஞ்சாட்டினார். லடிஃபின் வெளிப்படையான குற்றச்சாட்டிற்கு பிறகு அணிக்குள்ளும் நிர்வாகத்திற்குள்ளும் என்ன நடக்கிறது என்ற பெரிய கேள்வி எழுந்தது.

inzamam ul haq
inzamam ul haq

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த பிசிபி நிர்வாகக் குழுத் தலைவர் ஜகா அஷ்ரஃப், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைமை தேர்வாளர்கள் கையெழுத்திட்ட வணிக ஒப்பந்தங்கள் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார். மேலும், “வீரர்கள் மற்றும் தேர்வாளர்கள் வணிக ஒப்பந்தங்களில் ஏற்படுத்தும் விருப்பத்திற்குரிய தாக்கங்கள் அணியின் நலன்களில் மோதல் உருவாக ஒரு காரணமாக இருக்கின்றன. வீரர்கள் மற்றும் தலைமை தேர்வாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதை கட்டுக்குள் கொண்டுவர சட்டம் வகுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இது பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தான் “Clash Of Interest" என்ற குற்றச்சாட்டிற்கு பிறகு தலைமை தேர்வாளரான இன்சமாம் உல் ஹக் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

உண்மையை ஆராயாமல் என் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்! - ராஜினாமா செய்த இன்சமாம்

அணியின் மோசமான செயல்பாடு மற்றும் வீரர்களின் தேர்வில் "Clash Of Interest" குற்றச்சாட்டு என எழுந்துள்ள நிலையில், தன்னுடைய தலைமை தேர்வாளர் பதவியிலிருந்து இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் ராஜினாமா செய்த பிறகு பேசியிருக்கும் இன்சமாம், “ உண்மையை ஆராயாமல் மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். என் மீது அதிகப்படியான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனால் நான் ராஜினாமா செய்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்" என இன்சமாம் பேசியிருப்பதாக ஜியோ நியூஸ் செய்திவெளியிட்டுள்ளது.

Inzamam
Inzamam

மேலும் வீரர்களுடன் வணிக ஒப்பந்தகள் செய்துள்ள நிறுவனத்தில் இன்சமாம் ஒரு பார்டனராக இருப்பதாகவும், அதில் மூத்த வீரர்கள் சிலர் விருப்பமான தேர்வாக இணைந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பாகிஸ்தான் நிர்வாகம் அதிகாரப்பூர்வ செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, அணித் தேர்வு செயல்முறை தொடர்பான ஊடகங்களில் வெளியான நலன் முரண்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளது. இந்த குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை PCB நிர்வாகத்திடம் விரைவான முறையில் சமர்ப்பிக்கும்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com