வளர்ச்சி பெறா நுரையீரல், ஆஸ்துமா, பின்னடைவான 6 சிக்சர்கள்.. சோதனைகளையும் சாதனைகளாக்கிய Stuart Broad!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
Stuart Broad
Stuart BroadTwitter
Published on

இங்கிலாந்தில் மிகச்சிறிய உருவத்தோடு, குறைப்பிரசவத்தில் 3 மாதங்களுக்கு முன்பாகவே பிறந்தது அந்தக் குழந்தை. வளர்ச்சி பெறாத நுரையீரலோடு வளர்ந்த அக்குழந்தைக்கு வளர வளர சுவாசப்பிரச்னை, ஆஸ்துமா என எக்கச்சக்க உடல்நல சிக்கல்கள்... ஆனால் அதற்காக மூலையில் முடங்கிவிடவில்லை அக்குழந்தை!

தனக்கு பிடித்த கிரிக்கெட்டில், சிறு வயதிலிருந்தே முழு முயற்சியோடு முட்டிமோதுகிறது. தன் இளமை பருவத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக மாறிய அக்குழந்தை, சொந்த நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் அளவு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்திக்கொண்டது. தன்னுடைய இலக்கிற்காக வளர்ச்சி பெறா ஒரு நுரையீரலோடு மூச்சுத்திணறலோடு ஓடியோடி வாழ்வை கற்ற அந்த சிறிய குழந்தை, 20-21 வயதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது. இப்படி பற்பல கனவுகளோடு சிறகை விரித்து பறந்த அந்த குழந்தை, வருங்காலத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றியவருமாக மாறியது. அக்குழந்தைதான் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஸ்டூவர்ட் பிராட்!

ஒருவேளை பிராட் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் உடல் பிரச்னைகளால் மனமுடைந்து போயிருக்கக்கூடும். ஆனால் பிராட் அப்படியில்லை. அத்தனை வலிகளையும் தாண்டி கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

“என் மகனின் எதிர்காலத்தை அழித்துவிட்டீர்கள் யுவராஜ் சிங்!” மனம் உடைந்த ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை!

2006ஆம் ஆண்டு 20 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார் ஸ்டூவர்ட் பிராட். முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரரான க்றிஸ் பிராட்-ன் மகனாகவும், திறமையான வேகப்பந்து வீச்சாளராகவும் இங்கிலீஷ் அணியில் தடம்பதித்த ஸ்டூவர்ட்-க்கு, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை ஒரு மோசமான தொடராக மாறி அவரை நிலைக்குலையச் செய்தது. அதற்கு காரணம், யுவராஜ் சிங். அவர் கிட்டத்தட்ட பிராடின் கனவை உடைத்தே விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

Yuvraj 6 Sixes
Yuvraj 6 Sixes

இந்திய அணிக்கு எதிரான க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு எதிராக 19வது ஓவரை வீசினார் இளம் வீரரான ஸ்டூவர்ட் பிராட். எதிர்கொண்ட முதல் 3 பந்துகளையும் சிக்சர்களாக யுவராஜ் பறக்கவிட, ஏதாவது செய்து ரன்கள் போவதை தடுத்துவிடலாம் என்ற பிராட்டின் நம்பிக்கையானது 4வது பந்தில் பறந்த சிக்சரில் அப்படியே தகர்ந்துவிட்டதுதான். காரனம் ஸ்டம்ப் லைன், ஒயிட் லைன், ஒயிட் பவுன்சர், லென்த் பால் என அத்தனை பந்துகளை அவர் வீசி முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. அடுத்தும் சிக்சர்தான்!

தொடர்ந்து 5வது பந்தில் சிக்சர் செல்லும் போதெல்லாம் வாயில் கைவைத்தபடி கண்கள் கலங்கி பார்த்துக் கொண்டிருப்பார் பிராட். 6வது பந்தும் சிக்சர் செல்லும் போது அவரால் அதை நம்பவே முடியவில்லை! ‘இதற்கு மேல் வேறு என்ன தான் செய்யமுடியும்’ என்று அவநம்பிக்கையோடு களத்தில் இருந்து வெளியேறுவார் ஸ்டூவர்ட்.

உலக கிரிக்கெட்டில் முதல்முறையாக அப்போதுதான் டி20 உலகக்கோப்பை அறிமுகமாகியிருந்தது. யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் எதுவும் பரிட்சயம் இல்லாத நேரம். ஆகவே யுவராஜூம் மிக மிக கவனமாகவே பந்துகளை எதிர்கொண்டார். அதனாலேயே இறுதியில் யுவராஜ் சிங்கின் அற்புதமான பேட்டிங் ஃபார்ம் அன்று வென்றது.

Stuart Broad Father
Stuart Broad Father

அதற்கு பிறகான அரையிறுதியின் போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் மேட்ச் அம்பயராக இருந்த ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை க்றிஸ் பிராட், யுவராஜ் சிங்கிடம் சென்று மகனுக்காக வேதனை தெரிவித்தார். போட்டிக்கு முன்னதாக யுவராஜிடம் பேசிய பிராட் தந்தை, “என் மகனின் கிரிக்கெட் எதிர்காலத்தை கிட்டத்தட்ட முடித்து வைத்துவீட்டீர்கள் யுவராஜ், நன்றி” என்று மனம் உடைந்து கூறியுள்ளார்.

அதற்கு யுவராஜ் சிங் “இதில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல் எதுவும் இல்லை. உங்கள் மகன் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வருவார் பாருங்கள்” என கூறியுள்ளார். ஆனால் அதற்கும் மனம் அமைதியாகாத அவரின் தந்தை “என்னுடைய மகனுக்கு நீங்கள் அணிந்திருந்த டீசர்ட்டை வழங்கி, எதிர்காலத்திற்கான சில வார்த்தைகளை கூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்டூவர்டுக்கு எதிராக சிக்சர்கள் அடித்த போட்டியில் தான் அணிந்திருந்த டீசர்ட்டையே ஸ்டூவர்ட் பிராட்க்கு வழங்கிய யுவராஜ், அதில் “இந்த மோசமான மனநிலை எப்படிபட்டது என்று எனக்கும் தெரியும், ஏனென்றால் என்னுடைய பந்துவீச்சிலும் 5 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன” என்று எழுதியதோடு, “நீங்கள் இங்கிலாந்தின் எதிர்காலமாக மாறி பெரிய சாதனைகளை செய்யப் போகிறீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றும் கூறியுள்ளார். இதனை யுவராஜ் சிங் கடந்த 2021ஆம் ஆண்டு 22 யார்ன்ஸ் போட்காஸ்ட்டில் தெரிவித்திருந்தார்.

Stuart Broad
”புற்றுநோயால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்; எங்களுக்கு தெரியவேயில்லை”- யுவராஜ் குறித்து ஹர்பஜன் உருக்கம்!

“யுவராஜ் சிங் அடித்த சிக்சர்கள் தான் என்னை போர் வீரனாக மாற்றியது!”- ஸ்டூவர்ட்

யுவராஜ் சிங் அடித்த 6 சிக்சர்கள் குறித்து 2019ல் பேசியிருந்த பிராட், “19-20 வயது நிரம்பிய ஒரு இளம் பந்துவீச்சாளருக்கு அது அதிக அழுத்தமான நேரம். அப்போது டெத் ஓவர்களில் எப்படி வீச வேண்டும் என எனக்கு தெரியவில்லை. 6 பந்துகளிலும் யார்க்கர் வீசுவது, ஸ்லோவர் பந்துகளை வீசுவது என்றெல்லாம் வீசினேன். இருப்பினும் இதையெல்லாம் தாண்டி யுவராஜ் சிங் அற்புதமாக விளையாடினார். நான் தற்போது சிறந்த பந்துவீச்சாளராக இருக்க, யுவராஜ் சிங்கின் அந்த சிக்சர்கள் தான் காரணம்” என்று இஎஸ்பிஎன் உடன் பேசியிருந்தார்.

தற்போது ஓய்வை அறிவித்த பிறகும் 6 சிக்சர்கள் அடித்த போது இருந்த அவருடைய மனநிலை குறித்து பிராட் இடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் அவர், “ஆமாம் அது என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள். அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய போட்டிகளில் தான் நாம் விளையாடியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். இது மீண்டும் என் கிரிக்கெட் பயணத்தில் நடக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னை அதிலிருந்து வேகமாக வெளிக்கொண்டுவர தயார்படுத்தினேன். அத்தகைய சூழலில் அந்த வேகமான முயற்சி எனக்கு கைக்கொடுக்கவில்லை. பின்னர் எதிர்காலத்திற்கு தயார் செய்யும் ஒரு போர்வீரனாக என்னை நானே மாற்றிக்கொள்வதில் முழுவீச்சில் இறங்கினேன்” என்று ஆஷஸ் இறுதி டெஸ்ட்டின் 3ஆம் நாளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறினார்.

2015 வரை ஆஸ்துமா பிரச்னையை மறைத்து வைத்திருந்த ஸ்டூவர்ட் பிராட்!

2015ஆம் ஆண்டு வரை தனக்கு நுரையீரல் வளர்ச்சி இல்லாதது குறித்தும், ஆஸ்துமா பிரச்னை இருப்பது குறித்தும் சகவீரர்களிடம் கூட பகிராமல் வைத்திருந்தார் பிராட். 2015-ல் ஒருநாள் இரவு அணிக்குள் இருக்கும் வீரர்கள் பேசிக்கொள்ளும் போது, ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், உங்களை பற்றி வேறு யாருக்கும் தெரியாத ஒரு தகவலை கூறுங்கள் என கேட்கப்பட்டுள்ளது.

அப்போது அதற்கு பதிலளித்த ஸ்டூவர்ட் பிராட், ”நான் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பிறந்ததால் (குறைப்பிரசவத்தில்) எனக்கு ஒன்றரை நுரையீரல் மட்டுமே இருக்கிறது. அதாவது என் நுரையீரல்களில் ஒன்று முழுமையாக வளர்ச்சியடையவில்லை. நான் பிறந்தபோது மிக சிறிய உருவத்தோடும், நுரையீரல் பிரச்னையோடும் பிறந்து மரணத்தின் வாசலில் போராடிக்கொண்டிருந்தேன். அதனால்தான் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இன்ஹேலரை தற்போது பயன்படுத்துகிறேன்” என்றுள்ளார்.

அதனை கேட்ட சகவீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்டூவர்ட் பிராட் டெய்லி மெயிலிடம் கடந்த 2020ஆம் ஆண்டு அளித்த இதுதொடர்பான பேட்டியில், “ஒரு விளையாட்டு வீரராக இந்த பிரச்னை என்னை ஒருபோதும் பாதித்திருக்கவில்லை. இருப்பினும் நான் என் முழு கிரிக்கெட் வாழ்க்கையையும் எல்லோரையும் விட அரை நுரையீரல் குறைவாகவே வைத்து விளையாடினேன்” என்று தெரிவித்திருந்தார்.

Stuart Broad
Stuart Broad

சுவாச பிரச்னையோடு தன் வாழ்நாள் முழுக்க விளையாடிய ஸ்டூவர்ட் பிராட், இதுவரை 602 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது சிறந்த வீரராக நீடிக்கிறார். எத்தனை முறை வீழ்ந்தோம் என்பதைவிட, எத்தனை முறை எழுந்தோம் என்பதே ஒரு வீரருக்கு தேவையான முக்கிய அம்சம். அந்த வரிசையில், ஸ்டூவர் பிராட் எப்போதுமே ஒரு மாவீரன்தான். பல்வேறு இன்னல்களை கடந்து தற்போது ஒரு ஜாம்பவானாக தன்னை நிரூபித்துக்காட்டியுள்ள ஸ்டூவர்ட் பிராட் ஒவ்வொரு இளம் வீரர்களுக்கும் முன்னுதாரணமும் கூட!

Stuart Broad
`தினமும் நைட் ஊசி போட்டுக்கலனா...’ - வலிகளுடன் வரலாற்றையே மாற்றியமைத்த உலகநாயகன் மெஸ்ஸி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com