INDvAUS | மூன்றாவது உலகக் கோப்பையை முத்தமிடுமா இந்தியா..?

இதுவரை இந்த உலகக் கோப்பையில் 4 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன. அதில் மூன்றில் சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கின்றன. ஆஸ்திரேலியா மட்டுமே முதலில் பேட் செய்து வென்றது.
ரோஹித் ஷர்மா | பேட் கம்மின்ஸ்
ரோஹித் ஷர்மா | பேட் கம்மின்ஸ்PTI
Published on
ஃபைனல்: இந்தியா vs ஆஸ்திரேலியா
மைதானம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அஹமதாபாத்
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 18, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இந்தியா
போட்டிகள் - 10, வெற்றிகள் - 10, தோல்வி - 0, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலி - 711 ரன்கள்
சிறந்த பௌலர்: முகமது ஷமி - 23 விக்கெட்டுகள்
ஒவ்வொரு அணியையும் பந்தாடி பத்துக்கு பத்து வெற்றியோடு ஃபைனலுக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா. முதல் 5 போட்டிகளையும் சேஸ் செய்து வென்ற இந்தியா, அடுத்த 5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து வென்றிருக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்தையும் பந்தாடி 70 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா.

2023 cricket world cup
2023 cricket world cup

ஆஸ்திரேலியா
போட்டிகள் - 10, வெற்றிகள் - 8, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் - 491 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 22 விக்கெட்டுகள்
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக முதலிரு போட்டிகளிலுமே தோற்று இந்த உலகக் கோப்பையை தொடங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணி அவ்வளவு தான் என்று நினைத்திருந்த நிலையில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது அந்த அணி. எட்டாவதாக தென்னாப்பிரிக்காவை அரையிறுதியில் வீழ்த்தி மீண்டும் ஒரு உலகக் கோப்பை ஃபைனலுக்குள் நுழைந்திருக்கிறது.

2023 உலகக் கோப்பையில் நேருக்கு நேர்

கே எல் ராகுல்
கே எல் ராகுல்Kunal Patil

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியோடு தான் இந்த உலகக் கோப்பையைத் தொடங்கியது இந்தியா. சென்னையில் நடந்த அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, கோலி, ராகுல் ஆகியோரின் அரைசதங்களால் 42வது ஓவரில் இலக்கை எட்டியது இந்தியா. 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசிய கே எல் ராகுல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மைதானம் எப்படி இருக்கும்?

இதுவரை இந்த உலகக் கோப்பையில் 4 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன. அதில் மூன்றில் சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கின்றன. ஆஸ்திரேலியா மட்டுமே முதலில் பேட் செய்து வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை 33 ரன்களில் வென்றது அந்த அணி. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு விளையாடி வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது இந்தியா. அந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தான் இறுதிப் போட்டியிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அப்படி முழுமையாக பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்துவிடாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மூன்றாவது கோப்பையை முத்தமிடுமா இந்தியா

இந்தப் போட்டியை பொறுத்தவரை இந்தியா தான் ஃபேவரிட்ஸாக நுழைகிறது. எவ்வளவு ஆழமாக ஆராய்ச்சி செய்தாலும் இந்திய அணியிடம் குறை என்று ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாது. அத்தனை ஏரியாவிலும் நூற்றுக்கு நூறு வாங்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறது இந்தியா. ஒவ்வொரு வீரரும் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். எழுபதுகளின் வெஸ்ட் இண்டீஸ் 2000களின் ஆஸ்திரேலிய அணிகள் கூட ஒரு உலகக் கோப்பையில் இப்படி சவாலே இல்லாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததில்லை. ரோஹித் தொடங்கி குல்தீப் வரை எவர் வேண்டுமானாலும் ஞாயிற்றுக்கிழமை மேட்ச் வின்னராக உருவெடுக்கலாம்.

இந்தியாவை சமாளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா ஆஸ்திரேலியா

Glenn Maxwell
Glenn Maxwell

ஆரம்பத்தில் தடுமாறினாலும், அதன்பிறகு அசத்தலாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது கம்மின்ஸ் அண்ட் கோ. அட்டகாசமாக விளையாடியிருந்தாலும் அந்த அணியை ஃபேவரிட்ஸாக யாரும் கருதாததற்குக் காரணம் வீரர்களின் கன்சிஸ்டென்ஸி. அந்த அணியின் வீரர்கள் இந்திய வீரர்களைப் போல் சீராக விளையாடவில்லை. வார்னர், ஹெட், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் எல்லோருமே இந்திய பேட்ஸ்மேன்களை விட அதிரடியாக ஆடியிருக்கிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடியதை விட பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார்கள். ஆனால் சீராக ஆடியிருக்கிறார்களா என்றால் இல்லை. அந்த நாளில் அவர்களிடமிருந்து 150 ஸ்டிரைக் ரேட்டில் சதம் வருமா இல்லை ஒற்றை இலக்க ரன் வருமா என்று யாரும் கணிக்க முடிவதில்லை. பந்துவீச்சிலும் அப்படித்தான். ஹேசில்வுட் மட்டும்தான் தன் வேலையை ஓரளவு சீராக செய்துவருகிறார். ஆடம் ஜாம்பா 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், கடைசி 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் தான் எடுத்திருக்கிறார். அரையிறுதியில் விக்கெட் எடுக்கத் தடுமாறினார். இந்தியாவுக்கு எதிராகவும் அவர் விக்கெட் எடுக்கவில்லை. இந்திய அணியின் இருக்கும் ஃபார்முக்கு, ஒரு உலகக் கோப்பை ஃபைனலில் ஓரிரு வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளால் அந்த அணி சாம்பியன் ஆகிவிட முடியாது. ஸ்டீவ் ஸ்மித், லாபுஷான், இங்லிஸ் போன்ற வீரர்கள் எல்லோரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலிய நிர்வாகம் லாபுஷானுக்குப் பதிலாக ஸ்டாய்னிஸ் அல்லது கிரீனை களமிறக்கக்கூடும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

Shubman Gil
Shubman Gil

இந்தியா - சுப்மன் கில்: ஃபைனல்களின் வரலாற்றில் அதுவரை பிரகாசமாக ஜொலிக்காத நட்சத்திரங்களே அன்று ஜொலித்திருக்கின்றன. அந்த லாஜிக் படி பார்த்தால், இதுவரை இந்திய பேட்ஸ்மேன்களில் சதமடிக்காத ஒரே வீரரான கில் இந்தப் போட்டியில் அதை நிறைவு செய்யக்கூடும். அதை நிறைவு செய்ய அவரது ஃபேவரிட் மைதானத்தை விட சிறந்த இடம் இருந்துவிட முடியுமா!

David Warner
David WarnerSwapan Mahapatra

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்: வார்னர் எவ்வளவு நேரம் களத்தில் இருக்கிறார் என்பது ஒரு வகையில் ஆஸ்திரேலியாவின் தலையெழுத்தையே மொத்தமாக நிர்ணயிக்கும். ஃபைனல் என்பதால் ஹெட் மட்டும் வழக்கமான அட்டாக்கை மேற்கொண்டுவிட்டு, வார்னர் நிதானமாக ஆட முடிவு செய்யலாம். நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும் என்ற முடிவில் இருப்பார் வார்னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com