தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான் இந்திய அணி, அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் 22 சர்வதேச டி20 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேலும், ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணியாகவும் இந்திய அணி இருக்கிறது. இந்த 22 போட்டிகளின் மூலம் அதன் வெற்றி சதவிகிதம் 95.6 ஆக உள்ளது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர், விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சன். அவர், நேற்றைய போட்டியில், 214.00 ஸ்ட்ரைக்ரேட்டில் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அதில் 10 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். தவிர, டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சாம்சன் பெற்றார். முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 111 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், இந்திய அணிக்காக வெளிநாட்டில் சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
1. டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த உலகின் முதல் ஆசிய மற்றும் ஒட்டுமொத்த நான்காவது பேட்டர் சாம்சன் ஆவார். சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் சதம் அடித்த நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சாம்சன் பெற்றுள்ளார்.
2. தென்னாப்பிரிக்காவில் சூர்யகுமார் யாதவுக்குப் பிறகு டி20 போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் சாம்சன் ஆவார். சூர்யகுமார் கடந்த ஆண்டு 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்திருந்தார்.
3. ரோஹித் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (4) மற்றும் கே.எல்.ராகுல் (2) ஆகியோருக்குப் பிறகு டி20 போட்டிகளில் அதிக சதங்கள் (2) அடித்த வீரர்கள் பட்டியலிலும் சஞ்சு 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
4. ரோஹித் மற்றும் சூர்யகுமாருக்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிக (2) T20I சதங்களை அடித்த மூன்றாவது இந்தியர் சஞ்சு சாம்சன் ஆவார்.
5. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் சாம்சன் ஆவார். ரோஹித் மூன்று ODI சதம் மற்றும் ஒரு T20I சதம் அடித்துள்ளார். சஞ்சு சாம்சன், இரண்டு வகையிலான போட்டிகளிலும் தலா ஒரு சதம் அடித்துள்ளார்.
6. சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்ததே இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டி20 போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இதற்கு முன்பு, 2015ஆம் ஆண்டு ரோகித் சர்மா, 66 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். அவருடைய ஒன்பது ஆண்டுகால சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
7. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் முதல் இடத்தை சஞ்சு சாம்சன் பகிர்ந்துகொண்டார். 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 10 சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்தார்.
8. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த ஆண்டு அந்த அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ், 8 சிக்ஸ்ர்கள் மட்டுமே அடித்திருந்தார்.