தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 1-1 என டி20 தொடரை சமன்செய்தும், 2-1 என ஒருநாள் தொடரை வென்றும் அசத்தியது.
இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் 26-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரபாடாவின் அபாரமான பந்துவீச்சால் அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ரன்களை எடுத்தது. இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்த, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி டீன் எல்கரின் அபாரமான (185) சதத்தால் 408 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 131 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படியொரு மோசமான தோல்விக்கு பிறகு பெரிய வருத்தத்தில் இருக்கும் இந்திய அணியை மேலும் சோதிக்கும் வகையில் 2 புள்ளிகளை அபராதமாக வழங்கியுள்ளது ஐசிசி.
செஞ்சூரியனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஸ்லோ ஓவர் ரேட் வீசியதற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்திய அணிக்கு இரண்டு WTC புள்ளிகள் மைனஸ் செய்யப்பட்டு, 10 சதவீதம் போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அணி மீதான இந்த குற்றச்சாட்டை ரோகித் சர்மா ஒப்புக்கொண்டதால், முறையான விசாரணை தேவையில்லை எனவும் ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணி மீது அபாரதம் விதித்தது மற்றும் போட்டியின் தோல்வி விளைவாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெனால்டிக்கு முன் 16 புள்ளிகள் மற்றும் 44.44 என்ற பிசிடியுடன் 5வது இடத்தில் இருந்த இந்திய அணி, பெனால்டிக்கு பிறகு 38.89 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் 6வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.