பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அந்த தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப்போவதாக தகவல் வெளியானது. உலகக்கோப்பை விரக்தியில் இருந்த இரண்டு இந்திய ஜாம்பவான் வீரர்களும் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு, எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது. அதற்கேற்றார்போல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணியே பங்கேற்றது.
டி20 எதிர்காலத்தை பொறுத்தவரையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அவர்களாகவே முடிவை எடுத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தரப்பு தெரிவித்தது.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் சொந்த மண்ணிலேயே வைத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சமன்செய்து அசத்தியது. இந்நிலையில் ஒரு சிறந்த வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இப்ராஹிம் ஜத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஜனவரி 11, 14, 17 அன்று மொஹாலி, இந்தூர் மற்றும் பெங்களூர் முதலிய மைதானங்களில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ், ராகுல், ருதுராஜ், பும்ரா, ஷமி, ஜடேஜா முதலிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா, விராட் கோலி, சஞ்சு சாம்சன் முதலிய வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம்பெற்றுள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருநாள் போட்டியில் சதமடித்த சஞ்சுசாம்சனுக்கு டி20 அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தவிருக்கிறார்.
டி20 தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , அவேஷ் கான், முகேஷ் குமார்
டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் ஜத்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (WK), இக்ராம் அலிகில் (WK), ஹஸ்ரத்துல்லாஹ் ஷசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லாஹ் ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மவுல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபாரூக்கி, ஃபரீத் அகமது, நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்