ஸ்கூல் பசங்க கூட இப்படி மோசமா பீல்டிங் செய்யமாட்டாங்க!-கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸை விமர்சிக்கும் ரசிகர்கள்

டேவிட் வார்னர் மற்றும் லபுசனே இருவரையும் வெளியேற்றுவதற்கான எளிதான வாய்ப்பை தவற விட்டதற்காக கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Shreyas - KL Rahul
Shreyas - KL RahulTwitter
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2023 உலகக்கோப்பைக்கு முன் நடைபெறும் நிலையில், டி20 போட்டிகள் உலகக்கோப்பைக்கு பிறகு நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு பதில் ருதுராஜ் கெய்க்வாட் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எளிதான வாய்ப்புகளை தவறவிட்ட ஸ்ரேயாஸ் - கேஎல் ராகுல்!

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு முகமது ஷமி தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். மென் இன் ஃபார்மில் ஜொலித்து வரும் மிட்சல் மார்ஸை ஒரு அற்புதமான அவுட்ஸ்விங் டெலிவரியில் 4 ரன்னில் வெளியேற்றினார் ஷமி. அதற்கு பிறகு பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் ஆஸ்திரேலிய அணியை அழுத்தத்திலேயே வைத்திருந்தனர்.

ஷர்துல் தாக்கூர் வீசிய 9வது ஓவரின் கடைசி பந்தை ஸ்டிரைட் ஃபீல்டருக்கு நேராக காற்றில் அடித்தார் டேவிட் வார்னர். நேர் திசையில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களில் இருந்த டேவிட் வார்னரின் ஈசியான கேட்ச்சை கோட்டைவிட்டார். அதற்கு பிறகு சுதாரித்து கொண்ட டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்திற்கு மாறினார். ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்ட வாய்ப்பு இந்திய அணிக்கு பெரிய பாதகமாக அமைந்தது. அந்த மிஸ் கேட்சிற்கு பிறகு டேவிட் வார்னர் (53 பந்துகளில் 52 ரன்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (60 பந்துகளில் 41 ரன்) இருவரும் 106 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.

சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சிக்சர் அடிக்க முயற்சித்து ஜடேஜா பந்துவீச்சில் 52 ரன்னில் வெளியேறினார். பின்னர் கைக்கோர்த்த ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் வார்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர். தொடர்ந்து இந்த கூட்டணியும் சிறப்பாக விளையாட, அவர்களை பிரிக்கும் பொருட்டு 23வது ஓவரை வீசவந்தார் ரவீந்திர ஜடேஜா. அவர் வீசிய 23வது ஓவரின் போது, ​​கே.எல். ராகுல் 11 ரன்னில் உள்ள மார்னஸ் லாபுசாக்னேவை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். ஜட்டு வீசிய முதல் பந்தை கவர் திசையில் தள்ளிவிட்ட லபுசனே, ஒரு ரன்னிற்கு ஓடினார். அப்போது 30 யார்டுக்குள் இருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்து கீப்பருக்கு அடித்தார். நான் ஸ்டிரைக்கர் முனைக்கு சென்றுவிட்ட லபுசனே கிட்டத்தட்ட பாதி ஆடுகளத்தை கடந்திருந்தார். எளிதான ரன் அவுட் இந்தியாவிற்கு கிட்டைக்கும் என எதிர்ப்பார்த்த போது, சூர்யகுமார் அடித்த பந்தை கேஎல் ராகுல் எளிதாக தவறவிட்டு கோட்டைவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் லபுசனே அவுட்டாகி வெளியேறிய பந்திலும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக அவருடைய கேட்ச்சை தவறவிட்டார். பின்னர் பந்து அதுவாக சென்று ஸ்டம்பில் பட்டு லபுசனே அவுட்டாகி வெளியேறினார். இஷான் கிஷானுக்கு பதிலாக தங்களுடைய முதல் விக்கெட் கீப்பர் ராகுல் தான் என இந்திய அணி நிரூபிக்க முயன்றாலும் ராகுல் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இந்நிலையில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்ட வாய்ப்புகளை சுட்டிக்காட்டி “பள்ளி மாணவர்கள் கூட சிறப்பாக பீல்டிங் செய்வார்கள்” என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 44 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களுடன் ஆஸ்திரேலியா விளையாடிவருகிறது.

2019-ல் இருந்து மோசமாக இருந்துவரும் இந்திய அணியின் கேட்ச்சிங் விகிதம்!

இந்திய அணி தொடர்ச்சியாக பீல்டிங்கில் செய்து வரும் தவறுகள் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடந்துமுடிந்த ஆசியக் கோப்பை 2023 தொடரில் கூட நேபாளத்துக்கு எதிரான போட்டியில், இந்திய ஃபீல்டர்கள் பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் கேட்ச்சிங் விகிதம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் 75.1% என்ற மோசமான விகிதத்துடன் பட்டியலில் இரண்டாவது மோசமான இடத்தை பிடித்தது இந்தியா. அந்த பட்டியலில் கடைசி இடத்தில் 71.2% கேட்ச்சிங் திறன் வீதத்துடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் இருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன்னதாக ஃபீல்டர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது இந்திய அணிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com