Finals | இங்கிலாந்தை ஊதித்தள்ளிய ரோகித் படை.. 10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி!

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை முகநூல்
Published on

சொதப்பிய விராட் கோலி!

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் கயானாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குமா இல்லையா என்ற நிலை தொடக்கத்தில் இருந்தது. இருப்பினும் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சு தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒரு சிக்ஸர் விளாசி நம்பிக்கை கொடுத்த விராட் கோலி உடனடியாகவே 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

நடப்பு உலகக்கோப்பையில் மீண்டும் ஒரு சொதப்பலான ஆட்டத்தை அவர் ஆடினார். அவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட்டும் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அதிரடியில் மிரட்டிய ரோகித், சூர்ய குமார்!

8 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மாவும், சூர்ய குமார் யாதவும் அதிரடியில் பட்டையை கிளப்பினர். சிக்ஸர்களையும் விளாசினர். பந்துகள் அடிக்க சிரமமாக இருந்தாலும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

டி20 உலகக்கோப்பை
ரோகித் சர்மா, சூர்ய குமார் அதிரடி - இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு; கட்டுப்படுத்துமா இந்தியா?

36 பந்துகளில் அரைசதம் விளாசினார் ரோகித் சர்மா. தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 சிக்ஸர், 6 பவுண்ரிகளுடன் 57 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. அவரை தொடர்ந்து அதிரடியின் நம்பிக்கையாக இருந்த சூர்ய குமார் யாதவ் 47 ரன்னில் அரைசதத்தை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். களத்தில் பார்மில் இருந்த இருவீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

பாண்டியா அசத்தல், துபே சொதப்பல்! இந்தியா 171 ரன் குவிப்பு

துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ஷிவம் துபே. ஜடேஜா 17*, அக்‌ஷர் 10 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் மிரட்டிய பட்லர்!

172 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர் மற்றும் சால்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அர்ஸ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் 5 ரன்களும், பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களும் எடுக்கப்பட்டன. அர்ஸ்தீப் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார் பட்லர். மீண்டும் 2022 போல் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து சேஸ் செய்துவிடுமோ என்ற எண்ணம் ஒரு நிமிடம் அனைவருக்கும் வந்து சென்றது.

மேஜிக் செய்த அக்ஸர் பட்டேல்!

டி20 உலகக்கோப்பை
”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!

ஆனால், அக்ஸர் பந்து வீச வந்ததற்கு பின் ஆட்டமே மாறிப்போனது. முதல் பந்திலேயே கேப்டன் பட்லர் விக்கெட்டை சாய்த்தார் அக்ஸர். கீப்பர் கேட்ச் ஆகி 23(15) ரன்களில் நடையைக் கட்டினார் பட்லர். அடுத்த ஓவரிலேயே சால்ட்டை க்ளீன் போல்ட் ஆக்கினார் பும்ரா. மீண்டும் அடுத்த ஓவரை வீச வந்த அக்ஸர் பட்டேல் பேரிஸ்டோவ்வை க்ளீன் போல்ட் ஆக்கி அசத்தினார். பவர் பிளே முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்தது. மீண்டும் தன்னுடைய மூன்றாவது வீசிய அக்ஸர் பட்டேல் மொயின் அலி விக்கெட்டை சாய்த்தார்.

வியக்க வைத்த குல்தீப் பவுலிங்! 103 ரன்னில் சாய்ந்த இங்கிலாந்து!

அக்ஸர் பட்டேல் டர்ன் முடிந்த உடன் குல்தீப் விக்கெட் டேக்கிங்கை கையிலெடுத்தார். ப்ரூக், சாம் கர்ரன், ஜோர்தன் ஆகிய மூவரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். அதன்பிறகு அடுத்தடுத்து இரண்டு ரன் அவுட் ஆனது. இறுதி விக்கெட்டை பும்ரா சாய்த்தார். 16.4 ஓவரில் இங்கிலாந்து அணி 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூன் 27 ஆம் தேதி (நாளை) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மோதுகிறது.

10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி!

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 2007, 2014 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிகுள் நுழைந்துள்ளது இந்திய அணி. 2007 ஆம் ஆண்டு முதல் போட்டியில் தோனி தலைமையிலான அணி கோப்பையை தட்டிச் சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com