அதிரடியில் மிரட்டிய ரின்கு சிங்! அக்சர் சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா! டி20 தொடரை வென்றது இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
ind vs aus
ind vs ausPTI
Published on

2023 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியாவின் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 3வது டி20 போட்டியில் 222 ரன்கள் அடித்தும் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை.

2-1 என தொடரின் நிலைமாற இன்று 4வது டி20 போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் போன்ற ஸ்டார் வீரர்கள் திரும்பிய நிலையில் வலுவான அணியாகவே களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வாட் மீண்டும் பந்துவீச்சை தேர்வுசெய்ய, இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி நடைபெற்றது.

தடுமாறிய இந்திய அணி! மீட்டு எடுத்துவந்த ரின்கு-ஜிதேஷ்!

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 28 பந்தில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 37 ரன்கள் எடுக்க 6 ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ஆனால் ஜெய்ஸ்வாலை அதிக நேரம் நிலைக்கவிடாமல் வெளியேற்றிய ஹார்டி முதல் விக்கெட்டை எடுத்தார். 50 ரன்களை கடந்தாச்சு எப்படியும் ஸ்ரேயாஸ், சூர்யகுமார் இந்த முறையும் 200 ரன்களை கடந்து எடுத்துச்சென்றுவிடுவார்கள் என நினைத்த போது, ஆஸ்திரேலியா அணி போட்டியையே தலைகீழாக மாற்றியது.

Rinku Singh
Rinku Singh

அடுத்தடுத்து வந்த ஸ்ரேயாஸ் 8 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் 1 ரன்னிலும் நடையை கட்ட 63 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது. ஆனால் அடுத்த விக்கெட்டுக்கு கைகோர்த்த ரின்கு சிங் மற்றும் ருதுராஜ் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இரண்டு வீரரும் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டி நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க, அதையும் அதிக நேரம் நிலைக்கவிடாமல் ருதுராஜை வெளியேற்றி மீண்டும் கம்பேக் கொடுத்தது ஆஸ்திரேலியா அணி. 111 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த போது ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மா மற்றும் ரின்கு இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இரண்டு வீரர்களும் போட்டிபோட்டிக்கொண்டு சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட விறுவிறுவென ரன்கள் வர ஆரம்பித்தது. ஆனால் கடைசி 2 ஓவர்கள் இருக்கும் போது ஜிதேஷ் 35 ரன்னிலும், ரின்கு 46 ரன்களும் எடுத்துவெளியேற, கடைசி இரண்டு ஓவரில் இழுத்துபிடித்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 174 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.

அக்சர் சுழலில் சிதறிய ஆஸ்திரேலியா! தொடரை வென்றது இந்தியா!

175 ரன்கள் என்ற டிரிக்கியான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஸ் பிலிப் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் 4வது ஓவரிலேயே பிலிப்பை போல்டாக்கி வெளியேற்றிய ரவி பிஸ்னோய் ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்திற்கு முட்டுகட்டையிட்டார். டிராவிஸ் ஹெட் ஒருவர் மட்டும் இந்திய அணிக்கு பயம் காட்ட, பிஸ்னோய் தொடர்ந்து பந்துவீச வந்த அக்சர் பட்டேல் அடுத்தடுத்து ஹெட், பென் மற்றும் ஹார்டி என 3 பேரையும் வெளியேற்றி அனுப்ப ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

ind vs aus
ind vs aus

பின்னர் என்னதான் ஆஸ்திரேலியா போராடினாலும் 20 ஓவரில் அந்த அணியில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிறப்பாக பந்துவீசிய அக்சர் பட்டேல் 4 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4வது போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என வெற்றிபெற்று அசத்தியுள்ளது இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com