இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று குவாலியரில் நடந்தது. இப்போட்டியில் இந்தியாவின் இளம்வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி இருவரும் தங்களுடைய சர்வதேச அறிமுகத்தை பெற்றனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முதல் 3 ஓவரிலேயே டாப் ஆர்டர் வீரர்கள் இரண்டுபேரையும் வெளியேற்றிய அர்ஷ்தீப் சிங், அபாரமான தொடக்கத்தை கொடுத்தார்.
அதற்குபிறகு பந்துவீசிய மயங்க் யாதவ், தன்னுடைய அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். அதுமட்டுமில்லாமல் அவருடைய 8வது டெலிவரியில் முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
உடன் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய சுழலில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த 19.5 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி.
அதற்குபிறகு 128 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்பிளேவின் முதல் 6 ஓவரிலேயே 71 ரன்களை குவித்த இந்தியா, வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக வைத்தது.
அதற்குபிறகு வந்த ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட,11.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை இந்தியா பதிவுசெய்தது.