2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான ஸ்குவாடை ஒவ்வொரு அணிகளாக அறிவித்துக்கொண்டிருக்கின்றன. ரோஹித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தலைமை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதில் இடம்பெற்றிருக்கும் ஒருசில வீரர்களின் தேர்வு பல விமர்சனங்களுக்கு வழிவகுத்துவிட்டிருக்கிறது. எதற்கு சூர்யகுமார் யாதவ், எதற்கு 3 இடது கை ஸ்பின்னர்கள், ஷர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டரா என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இந்தியாவின் உலகக் கோப்பை ஸ்குவாட்
பேட்ஸ்மேன்கள்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்
விக்கெட் கீப்பர்கள்: கேஎல் ராகுல், இஷன் கிஷன்
ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர்
வேகப்பந்துவீச்சாளர்கள்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
ஸ்பின்னர்கள்: குல்தீப் யாதவ்
இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட, ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை ஸ்குவாடை புதன்கிழமை அறிவித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த அணியில் பெரிய அளவுக்கு விவாதம் செய்யவோ, விமர்சனம் செய்யவோ ஒன்றும் இல்லை. ஒரு சிறந்த ஸ்குவாடை அந்த அணி தேர்வு செய்திருக்கிறது. இந்திய ஆடுகளங்களைக் கணிக்கில் வைத்துப் பார்த்தால், அந்த அணியின் சுழற்பந்துவீச்சு சற்று பலவீனமானதாகத் தெரியலாம். இருந்தாலும் அது மிகப் பெரிய பின்னடைவைக் ஏற்படுத்திவிடப் போவதில்லை.
ஆஸ்திரேலியா உலகக் கோப்பை ஸ்குவாட்
பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித்
விக்கெட் கீப்பர்கள்: அலெக்ஸ் கேரி, ஜாஷ் இங்லிஸ்
ஆல்ரவுண்டர்கள்: கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்
வேகப்பந்துவீச்சாளர்கள்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், ஜாஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்
ஸ்பின்னர்கள்: ஆஷ்டன் அகர், ஆடம் ஜாம்பா
ஆஸ்திரேலிய அணியில் 5 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் மூவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் (மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ்). ஹெட், மேக்ஸ்வெல் இருவரும் ஸ்பின்னர்கள். இந்த 5 பேரில் குறைந்தபட்சம் 4 வீரர்கள் எப்படியும் ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் இடம்பெற்றுவிடுவார்கள். ஆஸ்திரேலிய அணியால் இவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 20 ஓவர்களாவது பெற முடியும். அது எந்தவொரு கேப்டனுக்குமே மிகப் பெரிய சாதகம்.
இத்தனை ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பையில் 6 பௌலர்களை மட்டுமே களமிறக்கியிருக்கிறது. வழக்கமாக 15 பேர் கொண்ட அணியில் பெரும்பாலான அணிகள் 7 பௌலர்களை தேர்வு செய்வார்கள். 2019 உலகக் கோப்பையில் கூட ஆஸ்திரேலியா அப்படித்தான் செய்திருந்தது. கடந்த உலகக் கோப்பையில் பேக் அப் விக்கெட் கீப்பர் இல்லாமல் சென்றிருந்தது அந்த அணி. ஆனால் இம்முறை அதிக பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதால், ஜாஷ் இங்லிஸை பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யும் ஆடம்பரம் அந்த அணிக்கு அமைந்திருக்கிறது.
இதுவே இந்திய அணிக்கு அப்படி இல்லை. ஹர்திக், ஜடேஜா ஆகியோருக்கு சரியான பேக் அப் யாரும் இல்லை. அதனால் வேறு வழியே இல்லாமல் அக்ஷரை தேர்வு செய்திருக்கிறார்கள். மேலும் அதன் காரணமாக சஹால், அஷ்வின் போன்ற ஸ்பின்னர்களை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்திய அணி. குறைந்தபட்சம் டிராவிஸ் ஹெட் போல் 3-4 ஓவர்கள் கொடுக்கக்கூடிய ஒரு ஆல் ரவுண்டர் இருந்திருந்தால் கூட இந்திய அணிக்கு அது சில ஆப்ஷனகள் கொடுத்திருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை ஹர்திக், ஜடேஜா இருவரும் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். இந்திய பௌலர்கள் அவ்வளவாக பேட்டிங் செய்ய மாட்டார்கள் என்பதால் எட்டாவது இடத்தில் ஷர்துல் ஆடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்திய அணி. ஆனால் அவரையும் முழுமையான ஆல்ரவுண்டராகக் கருதிவிட முடியாது. அக்ஷரை அவருடைய பேட்டிங்குக்காக தேர்வு செய்ய முடியாது என்பதால், டாப் 5 இடங்களில் எந்த ஆல் ரவுண்டருக்கும் இடம் இருக்காது. இதுதான் இந்திய அணியின் நிலை!
இந்திய டெய்லின் பேட்டிங் திறனால், ஒரு டாப் பௌலரை (பெரும்பாலும் ஷமி அல்லது சிராஜ்) இந்தியா பிளேயிங் லெவனில் களமிறக்க முடியாது. அதுவே ஆஸ்திரேலிய அணியை எடுத்துக்கொள்வோம். கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க் இருவருமே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த பிரச்சனையே இல்லை. மேலும் ஒருவேளை ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் மூவரில் யாரேனும் காயமடைந்தால் அந்த அணி ஒரு வேகப்பந்துவீச்சாளரைத்தான் களமிறக்கவேண்டும் என்றில்லை. ஒரு கூடுதல் பேட்டிங் ஆப்ஷனைக் கூட இறக்கலாம். ஏனெனில், அவர்களுக்கு 3 ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் 8 நல்ல பௌலிங் ஆப்ஷன்கள் இருக்கும். சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் கூட, மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் இருவரையும் தேர்வு செய்துவிட்டு, 3 பௌலர்களை மட்டும் களமிறக்கியது ஆஸ்திரேலியா. ஆனால் இந்திய அணிக்கு இப்படியான சலுகைகள் கிடைக்கப்போவதில்லை.
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது யுவ்ராஜ் என்ற உலகத்தர ஆல்ரவுண்டர் இருந்தார். அவர்கள் போக ரெய்னா, சச்சின், சேவாக் என பந்துவீசக்கூடிய பல வீரர்கள் இருந்தனர். 2003 உலகக் கோப்பை இறுதி வரை சென்ற அணியில் டிராவிட், முகமது கைஃப் தவிர 9 பௌலிங் ஆப்ஷன்கள் கங்குலிக்கு இருந்தது. இந்த ஆல்ரவுண்டர் பிரச்சனை 2019 உலகக் கோப்பையிலும் இந்தியாவை பாதித்தது. திடீரென பந்துவீசக்கூடியவர் என்பதாலேயே விஜய் சங்கரை அணிக்கு எடுத்துவந்தனர். இப்போதும்கூட மொத்தமே 2 ஆல்ரவுண்டர்களை வைத்துக்கொண்டு கோப்பை வெல்ல கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்!