இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா யு-19 அணியானது 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.
செப்டம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்ற இந்திய யு-19 அணி, ஒருநாள் தொடரை 3-0 என வென்று அசத்தியது.
அதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்டானது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி, பேட்டிங்கில் மாயாஜாலம் செய்தார்.
விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய வைபவ்-விஹான் ஜோடி, 19 ஓவரில் 133 ரன்கள் சேர்த்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி அடித்தது மட்டும் 104 ரன்கள். 58 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதிவேக சதத்தை பதிவுசெய்து சாதனை படைத்தார். துரதிருஷ்டவசமாக 104 ரன்களில் ரன் அவுட்டாகி வைபவ் சூர்யவன்ஷி வெளியேற, இந்திய அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸ்திரேலியா யு-19 அணி 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களுடன் விளையாடிவருகிறது.
13 வயதில் டெஸ்ட் சதமடித்த இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, யு-19 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும், அதிவேகமாக டெஸ்ட் சதமடித்த இந்திய யு-19 வீரர் மற்றும் உலகளவில் அதிவேகமாக டெஸ்ட் சதமடித்த இரண்டாவது யு-19 வீரர் என்ற சாதனைகளை குவித்து அசத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த யு-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் மொயின் அலி 56 பந்தில் சதமடித்தது முதலிடத்தில் இருந்துவருகிறது.
2011, மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் இளம் வயதிலேயே தொடங்கிவிட்டார். இந்திய கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் மதிக்கப்படும் ரஞ்சிக்கோப்பை தொடரில் 12 வயதில் அறிமுகத்தை பெற்றார் சூர்யவன்ஷி, அவர் அங்கு பீகாருக்காக விளையாடினார்.
இந்த குறிப்பிடத்தக்க தொடக்கமானது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற இந்திய ஜாம்பவான்களின் முந்தைய சாதனைகளை முறியடிக்க அவரை அனுமதித்துள்ளது. இப்படியே தொடர்ந்தால் மற்றொமொரு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டராக வைபவ் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவின் முதல் தர உள்நாட்டுப் போட்டியின் வரலாற்றில் இளைய வீரராக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிவருகிறார்.