2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரின் கடைசி லீக் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணியும் நெதர்லாந்து அணிகயும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது. பந்துகள் அனைத்தும் பவுண்டரி லைனுக்கும், அதைத் தாண்டியும் பறந்தது. முதல் பத்து ஓவர்களிலேயே இந்திய அணி 90 ரன்களைக் குவித்தது.
இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடக்கம். அதிரடியாக ஆடிய கில் 35 பந்துகளில் 51 ரன்களை அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த விராட் 56 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அவுட்டானார். பின் இணைந்த கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றனர்.
அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அசத்தலான சதமடிக்க, கே.எல்.ராகுலும் மின்னல் வேகத்தில் சதமடித்தார். ஸ்ரேயாஸ் 94 பந்துகளில் 128 ரன்களைக் குவித்தார். அதில் 10 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை விளாசினார். 64 பந்துகளில் 102 ரன்களை அடித்த ராகுல் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசினார்.
மொத்தமாக இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 410 ரன்களை குவித்தது. ஒருநாள் போட்டிகளில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50+ ரன்களை அடித்துள்ளது இது நான்காவது முறை. உலகக்கோப்பைத் தொடரில் இதுவே முதல்முறை இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக இரண்டு முறையும் ஜிம்பாவேக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒரு முறையும் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50+ ரன்களை எடுத்துள்ளனர்.
இன்றைய போட்டியில் 62 பந்துகளில் சதமடித்ததன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 63 பந்துகளில் சதமடித்த ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் மட்டும் இந்திய அணி 16 சிக்ஸர்களை விளாசியுள்ளது. உலகக்கோப்பையில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்சமாகும். முன்னதாக 2007 ஆம் ஆண்டு பெர்முடா அணிக்கெதிராக இந்திய அணி ஒட்டுமொத்தமாக 18 சிக்ஸர்களை அடித்திருந்தது.
அதேபோல் உலகக்கோப்பையில் 4 ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த தோனி ரெய்னா சாதனையை ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி முறியடித்தது. தோனி - ரெய்னா ஜோடி 2015 ஆம் ஆண்டு ஜிம்பாவேக்கு எதிராக நடந்த போட்டியில் 196 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி 208 ரன்களை குவித்துள்ளது.