தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்த நிலையில், நான்காவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்துவருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 38 ரன்களில் வெளியேறினார். பின் இணைந்தனர் சஞ்சு சாம்சனும், திலக் வர்மாவும்.
இருவரும் இணைந்து தென்னாப்ரிக்காவின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். கிட்டத்தட்ட வீடியோ கேம் பார்த்த அனுபவம்தான் பார்வையாளர்களுக்கு கிடைத்திருக்கும். பவர் ப்ளேவில் மட்டும் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 73 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய சாம்சன் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 129 ரன்களைக் குவித்தது. இது 10 ஓவர்களில் இந்திய அணி அடித்த இரண்டாவது அதிகபட்ச ரன்னாகும். முன்னதாக இந்தாண்டு வங்கதேசத்திற்கு எதிராக ஹைதாராபாத்தில் நடந்த போட்டியில் 152 ரன்களைக் குவித்திருந்தது.
ஒருபக்கம் சாம்சன் அதிரடி காட்டினார் என்றால், மறுபக்கம் திலக் வர்மா விட்ட ராக்கெட்கள் நிலவுக்குத்தான் சென்றது. 22 பந்துகளில் திலக் வர்மாவும் 5 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார். இந்திய அணி 14.1 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.
அதிரடியில் மிரட்டிய சாம்சன் 51 பந்துகளில் சதமடித்தார். இதில் 8 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடக்கம். விரட்டி வந்த திலக் வர்மாவும் 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 9 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக இரு சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் திலக் வர்மாவும் இணைந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களை குவித்தது. இது இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச டி20 ஸ்கோராகும். தென்னாப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோராகும்.
சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களையும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களையும் குவித்திருந்தனர். திலக் வர்மா 10 சிக்சர்களையும், சாம்சன் 9 சிக்சர்களையும் விளாசி இருந்தனர். இந்த இன்னிங்ஸில் மட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் 23 சிக்சர்களை விளாசியுள்ளனர். திலக் வர்மாவும் சஞ்சு சாம்சனும் இணைந்து 210 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தொடர்ந்து விளையாடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.