இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
ஆனால், டி20 தொடரை கோட்டைவிட்ட இலங்கை அணி, ஒருநாள் தொடரில் ஒரு தரமான கம்பேக் கொடுத்து இந்திய அணியை அதிர்ச்சிக்குள் தள்ளியது. முதல் போட்டியை போராடி சமன்செய்த இலங்கை, பின்னர் இரண்டாவது போட்டியை 32 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியை 110 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
1997-ம் ஆண்டிற்கு பிறகு இருதரப்பு தொடரில் இந்தியாவை முதல்முறையாக வீழ்த்தி இலங்கை அணி தரமான கம்பேக் கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் மோசமான சரிவை கண்டிருப்பது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையசெய்துள்ளது.
தொடரை சமன்செய்யும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக 3வது போட்டியிலும் டாஸ் வென்ற இலங்கை அணி வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க வீரர்கள் நிசாங்கா 45 ரன்கள், அவிஷ்கா 96 ரன்கள் மற்றும் குசால் மெண்டீஸ் 59 ரன்கள் என அடித்தபோதிலும் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதால் 50 ஓவர் முடிவில் 248 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை அணி.
கடந்த போட்டியிலும் குறைவான ரன்களை அடித்து இலங்கை அணி டிஃபண்ட் செய்ததால், இந்த ஸ்கோரை இந்தியா எப்படி சேஸ் செய்யப்போகிறது என்ற குழப்பம் இருந்தது. ஆனால் 3வது போட்டியிலும் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி 138 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
தன்னுடைய அற்புதமான சுழற்பந்துவீச்சு மூலம் கலக்கிய 21 வயது துனித் வல்லலேகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த படுதோல்வி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இழந்துள்ளது இந்திய அணி.