இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் கனமழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழைநின்ற பின் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை நிற்காததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. neck stiffness காரணமாக சுப்மன் கில் விளையாட முடியாத நிலையில், அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். ஆகாஷ் தீப்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இணைந்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் நிதானமான ஆட்டத்தையே தொடங்கினர். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் அம்பயர்ஸ் கால் முறையில் தனது விக்கெட்டை பாதுகாத்த நிலையில், 6 ஆவது ஓவரின் மூன்றாம் பந்திலேயே சௌதி பந்தில் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். சௌதிக்கும் ரோகித் சர்மாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துள்ளது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும், 33 இன்னிங்ஸ்களில் 12 முறை ரோகித் சர்மாவை வெளியேற்றியுள்ளார் சௌதி.
மூன்றாவது ஆட்டக்காரராக வந்த விராட் கோலியும் ரன்கள் ஏதும் எடுக்காமல் வில்லியம் ஓ ரூர்க் பந்தில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃபராஸ் கானும் ரன்கள் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேற 10 ஓவர்களில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது இந்தியா. 13 ஆவது ஓவரின் இடையே மீண்டும் மழை வர ஆட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
பின் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்தும் ஜெய்ஸ்வாலும் நிதானமான ஆட்டத்தை ஆடி அணியை மீட்டு வந்தனர். ஆனால், ஜெய்ஸ்வால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓ ரூர்க் பந்தில் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். பின் வந்த கே.எல். ராகுலும், ஜடேஜாவும் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற தற்போதுவரை இந்திய அணி 23.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 34 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக பந்துவீசும் நியூசிலாந்து அணியில் சௌதி 1 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்களையும், வில்லியம் ஓ ரூர்க் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.