ஜூலை 29 ஆம் தேதி கிங்ஸ்டன் ஓவல் பர்படாசில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் ஹர்திக் கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மாவிற்கும் விராட் கோலிக்கும் ஓய்வளிக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இஷான் கிஷன் 55 ரன்களையும் சுப்மன் கில் 34 ரன்களை எடுத்தாலும் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷெபர்டு, மோட்டி (Motie) தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 182 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேயர்ஸ் 36 ரன்களையும், கேப்டன் ஹோப் 63 ரன்களையும் கார்டி 48 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக கேப்டன் ஹோப் தேர்வு செய்யப்பட்டார்.
சூர்யகுமார் இந்த போட்டியில் 24 ரன்களில் Motieயிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் இடது கை சுழல்பந்து வீச்சாளரிடம் 13 போட்டிகளில் 6 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான அவரது சராசரி 18.17 ஆக உள்ளது.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நினைத்தபடி பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் களம் சிறப்பானதாக மாறியது. போட்டியில் தோற்றது ஏமாற்றம் தான். ஆனால் நாங்கள் இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்த விதம் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. தாக்கூர் நாங்கள் போட்டியில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார். ஹோப் மிகச்சிறப்பாக பேட் செய்தார். உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நான் அதிக ஓவர்களை வீச வேண்டும்” என தெரிவித்தார்.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுடனான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. தொடர் 1 - 1 என்றுள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் திரும்புவர் என்பதால் அதை வென்று இந்திய அணி தொடரை வெல்லலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.