2024-25 கிரிக்கெட் சீசனுக்கான இந்திய அணியின் ஹோம் அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்கள் ஆடுகிறது இந்திய அணி. இந்த ஹோம் சீசனில் ஒரு டெஸ்ட் போட்டியும், ஒரு சர்வதேச டி20 போட்டியும் சென்னையில் நடக்கின்றன.
செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 23 வரை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கிறது. 2021ம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய போட்டியே இந்த மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி. கொரோனா சமயத்தில் நடந்த அந்தப் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதன்பிறகு வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 வரை கான்பூரில் நடக்கிறது.
அதன்பிறகு இவ்விரு அணிகளும் 3 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி அக்டோபர் 6ம் தேதி தரம்சாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும் நடக்கின்றன. மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் அக்டோபர் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்ததும், அடுத்த 4 நாள்களில் இன்னொரு தொடரில் ஆடுகிறது இந்திய அணி. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது அந்த அணி. இத்தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் அக்டோபர் 16 முதல் 20 வரை ஆடப்படும். இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 24 முதல் 28 வரை புனேவில் நடக்கிறது. கடைசிப் போட்டி மும்பை வான்கடேவில் நவம்பர் 1 முதல் 5 வரை நடக்கும்.
இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்கும். அது முடிந்து பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகிறது இந்தியா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஷார்ட் ஃபார்மட் ஆட்டங்கள் ஆட வருகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி சென்னையில் ஜனவரி 22ம் தேதி நடக்கிறது. அடுத்த இரு போட்டிகள் முறையே கொல்கத்தாவிலும், ராஜ்கோட்டிலும் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. நான்காவது போட்டி ஜனவரி 31 புனேவில் நடக்கும். கடைசி ஆட்டம் பிப்ரவரி 2ம் தேதி மும்பையில் நடக்கவிருக்கிறது.
அதன்பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்தப் போட்டியும் மஹாராஷ்டிராவில் தான் நடக்கப்போகிறது. நாக்பூரில் அந்த ஆட்டம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கும். இரண்டாவது ஆட்டம் பிப்ரவரி 9 கட்டாக்கில் நடைபெறுகிறது. கடைசி ஆட்டம் 12ம் தேதி அஹமதாபாத்தில் நடக்கிறது.