உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியும் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரு அணி வீரர்களிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
டாஸ் வென்ற பின் பேசிய ரோஹித் சர்மா, “முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆடுகளம் நன்றாக இருப்பதுபோல் தெரிகிறது. நாங்கள் எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். நியூசிலாந்து தொடர்ந்து நிலையாக விளையாடும் அணிகளில் ஒன்று. இது மிக முக்கியமான நாள். இதற்கு முன் விளையாடிய அதே அணியுடன் விளையாட இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
டாஸ் குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்திருந்தோம். வழக்கமான ஆடுகளம் போல் தெரிகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலை. ஆனால் இடம் மட்டும் வேறு. இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாட இருக்கிறோம்” என்றார்.
இந்தியா அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
நியூசிலாந்து அணி வீரர்கள்: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மார்க் சாப்மேன், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.