புனேவில் இந்தியா நியூசி இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. கான்வே 75 ரன்களும், ரச்சின் ரவீந்த்ரா 65 ரன்களும் எடுத்தனர். சுழற்பந்து வீச்சால் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியை தடுமாற வைத்தனர். இதனால் 259 ரன்களுக்கு நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமான ஆட்டத்தைத் தொடங்கியது கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி. 50 ரன்களில் இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது சாண்ட்னர் பந்தில் கில் 30 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
பின் வந்த விராட் கோலியும் 1 ரன்னில் வெளியேற இந்திய அணி 56 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. விராட் கோலி வெளியேறியபோது ஊசி கீழே விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு மைதானமே மௌனத்தில் இருந்தது. 2021 ஆம் ஆண்டு முதல் ஆசிய மைதானங்களில் விராட் கோலி தடுமாறிய ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். 26 இன்னிங்ஸ்களில் முறை சுழலுக்கு எதிராக விராட் கோலி வீழ்ந்துள்ளார்.
நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வாலும் 30 ரன்களில் வெளியேற ரன்களைச் சேர்க்க இந்திய அணி திண்டாடியது. ஏனெனில் பேட்டர்கள் சற்று நிலைப்பதுபோல் இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து பவுலியன் திரும்புவர். அப்படித்தான், பண்ட் 18 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 11 ரன்களிலும் நடையைக் கட்டினர். அஸ்வினும் நிலைக்கவில்லை. ஜடேஜா மட்டுமே நிலையாக ஆடி ரன்களை உயர்த்தினார். அவருக்கு வாஷிங்டன் சுந்தரும் சற்றே கைகொடுக்க ரன் மெல்ல மெல்ல உயரெந்தது.
ஜடேஜா 38 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது சாண்ட்னர் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதே ஓவரில் ஆகாஷ் தீப்பும் வெளியேற அதற்கடுத்த இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது.
cricbuzz இணையதளம் இதை, ‘வேட்டையாடுபவர் வேட்டையாடப்படும் அரிய சந்தர்ப்பம். இதே இந்திய அணி இங்கு விளையாட வரும் பல அணிகளுக்கு இதைச் செய்திருக்கிறது. ஆனால், இன்று அவர்கள் சாண்ட்னரின் சுழலில் சுருண்டுவிட்டனர்’ என தெரிவித்துள்ளது. இது அப்படியே உண்மை. ஏனெனில் சாண்ட்னர் தனது சுழல் ஆயுதத்தால் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நியூசிலாந்து அணி அதிவேகமாக ரன்களைக் குவித்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லேதமும், கான்வேவும் வேகமாக ரன்களை தேற்றிவந்தனர். 9 ஓவர்களில் 34 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 137 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.