விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த 2023 ஆசியக்கோப்பை தொடர் ஒருவழியாக முடிவை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 7 முறை ஆசிய சாம்பியனான இந்திய அணியும், 6 முறை ஆசிய சாம்பியனான இலங்கை அணியும் அடுத்த கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் நாங்களும் பேட்டிங் தான் எடுத்திருப்போம் என கூற, இலங்கை அணி பெரிய ஸ்கோரை போர்டில் போடப்போகிறது என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய கனவோடு களத்திற்கு வந்த இலங்கை வீரர்களை தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் தடுமாற வைத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
முதல் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா பிள்ளையார் சுழி போட, அடுத்துவந்த முகமது சிராஜ் இலங்கை அணிக்கு நிம்மதியற்ற ஒரு இரவை ஏற்படுத்தினார். தொட்டதெல்லாம் தங்கம் என்பது போல் அவர் வீசிய அனைத்து பந்தும் விக்கெட்டுகளாக மாறின. இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என கலக்கிய முகமது சிராஜ் ஒரே ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவரை தொடர்ந்து அதே அட்டாக்கை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா அவருடைய பங்கிற்கு இலங்கைக்கு சோதனை மேல் சோதனை கொடுத்தார்.
இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 15.2 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
51 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு களத்திற்கு வந்த இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் போட்டியை விரைவாகவே முடித்து வைத்தனர். 9 பவுண்டரிகளை விரட்டிய இந்த ஜோடி 6.1 ஓவரிலேயே 51 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது.
இதுவரை 7 முறை ஆசியக்கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணி, 8வது முறையாக ஆசியக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதே எனர்ஜியை இந்திய அணி உலகக்கோப்பைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.