ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9-வது பதிப்பானது அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 3 முதல் அக்டோபர் 20 வரை நடைபெறவிருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில், குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை முதலிய 5 அணிகளும், குரூப் பி-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா முதலிய 5 அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட இந்திய மகளிர் அணி வெல்லாத நிலையில், இந்தமுறை அதிக நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு இன்று விளையாடியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த நிலையில், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி மிரட்டியது. டாப் ஆர்டர் வீரர்கள் 0, 8, 3 என சொற்ப ரன்களில் வெளியேற, அதற்குபிறகு வந்த வீரர்கள் அழுத்தத்தை எதிர்கொண்டனர்.
அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்திய பவுலர்கள் 48 பந்துகள் டாட் பந்தாக வீசி அசத்தினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
106 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. பிளேயர் ஆஃப் தி மேட்ச்சாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அருந்ததி தேர்வு செய்யப்பட்டார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியா தன்னுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.