கடைசி வரை படபடத்த போட்டி! இறுதி நம்பிக்கையாக நின்ற ரின்கு! 1 பந்தில் சிக்சர் அடித்து அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
ரின்கு சிங்
ரின்கு சிங்Twitter
Published on

2023 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவின் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி களம்கண்டுள்ளது. அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரை முன்வைத்து பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது பிசிசிஐ.

முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ஜோஸ் இங்கிலிஸ்!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேத்யூ ஷார்ட்டை 13 ரன்னில் ரவி பிஸ்னோய் போல்டாக்கி அனுப்பினாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் இருவரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Josh Inglis
Josh Inglis

ஒருபுறம் ஸ்மித் நிலைத்து ஆட மறுமுனையில் அதிரடி காட்டிய ஜோஸ் இங்கிலிஸ், நான்குபுறமும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஸ்மித் அரைசதம் அடித்து வெளியேற, 50 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என பறக்கவிட்டு 110 ரன்களை குவித்த இங்கிலிஸ் ஆஸ்திரேலியாவை 208 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

ஒரு த்ரில்லர் போட்டியை முடித்துவைத்த ரின்குசிங்!

209 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் பந்தையே சந்திக்காமல் நான்ஸ்டிரைக்கில் இருந்த ருதுராஜை ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ருதுராஜ் சென்றாலும் பொறுப்பெடுத்து அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என நினைத்த போது 21 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 22 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற, 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

SKY
SKY

5 சிக்சர்களை பறக்கவிட்டு கெத்துக்காட்டிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து வெளியேற, கடைசிவரை நிலைத்து நின்ற சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 80 ரன்களை குவித்து கிட்டத்தட்ட போட்டியை முடித்துவைத்துவிட்டு வெளியேறினார்.

ind vs aus
ind vs aus

கடைசி 2 ஓவருக்கு 12 ரன்கள் மட்டுமே தேவையென இருந்த போது, 19வது ஓவரில் 4 பந்துகளை சந்தித்த அக்சர் பட்டேல் 3 டாட் பந்துகளை வைத்து, போட்டிக்கு அழுத்தம் கூட்டினார். ஆனால் 5வது பந்தில் பவுண்டரி அடித்த ரின்கு சிங் இந்திய ரசிகர்களை நிம்மதியடைய வைத்தார். ஆனால் அடுத்த ஓவரிலும் சொதப்பிய அக்சர் பட்டேல் 6 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அடுத்தடுத்து களத்திற்கு வந்த ரவி பிஸ்னோய் மற்றும் அர்ஸ்தீப் இருவரும் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

Rinku Singh
Rinku Singh

2 பந்துக்கு 2 ரன்கள் இருந்த போட்டி கடைசி 1 பந்துக்கு 1 ரன்கள் என மாறியது. கடைசிவரை களத்தில் இருந்த ரின்கு சிங் மீது மட்டுமே ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஒருவேளை சூப்பர் ஓவர் சென்று விடுமே என்று பதட்டமான கடைசி பந்தில் தூக்கி நேராக சிக்சருக்கு அனுப்பிய ரின்கு சிங், ஒரு விறுவிறுப்பான போட்டியை கெத்தாக முடித்துவைத்தார். முடிவில் இந்திய அணி முதல் டி20 போட்டியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com